மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு பேரூராட்சிக்கு உட்பட்ட வையாபுரிதிடல் பகுதியைச் சேர்ந்தவர், பிரியதர்ஷினி. இலங்கையில் இருந்து தாய்தமிழ்நாட்டிற்குத் திரும்பிய இலங்கைத் தமிழரான யோகநாதனின் மகள். கூலி வேலை பார்த்து தான் தனது மகளை யோகநாதன் படிக்க வைத்துள்ளார்.
இதற்கிடையே மணல்மேடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயின்ற பிரியதர்ஷினி, 12ஆம் வகுப்புத் தேர்வில் 468 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்தார். சமீபத்தில் நடந்த நீட் தேர்வில் 128 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார்.
அரசுப் பள்ளி மாணவர்கள் தரவரிசைப் பட்டியலில் 494ஆவது இடத்தைப் பிடித்துள்ள பிரியதர்ஷினி, கல்வி தொலைக்காட்சியைப் பார்த்துதான் படித்து, தேர்வுக்குத் தயாராகியுள்ளார்.
இதுதொடர்பாக மாணவி பிரியதர்ஷினி ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில், 'தற்போது அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு அனுமதி கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து தாழ்த்தப்பட்ட பிரிவு மற்றும் தாய் தமிழ்நாடு திரும்பிய தமிழர்கள் ஆகியப் பிரிவுகளின் கீழுள்ள இட ஒதுக்கீட்டின் வாயிலாக மருத்துவக் கல்வி சேர்க்கையில் தனக்கு இடம் கிடைக்கும்' என எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.
வகுப்பாசிரியர் சரிதா உள்ளிட்ட ஆசிரியர்களின் வழிகாட்டுதல் காரணமாகவே, நீட் தேர்வில் பங்கேற்க ஆர்வம் ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். மருத்துவக்கல்லூரியில் சேர்ந்து மருத்துவரான பின்னர் தன்னைப் போன்ற ஏழை மக்களுக்கு சேவை உணர்வோடு பணியாற்ற விரும்புவதாகத் தெரிவிக்கும் பிரியதர்ஷினி, ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி செய்யப்போவதாகவும் நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.
நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவிக்கு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கிராம மக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
இதையும் படிங்க:பெண் பெற்று நீட் தேர்வில் வென்ற கிராமப்புற மாணவர்!