பெண்கள் சேலைகளில் அதிகம் விரும்புவது பட்டுச்சேலைகள். இச்சேலைகள் காஞ்சிபுரம், பனாரஸ், ஆரணி, மைசூர், திருபுவனம் போன்ற பல்வேறு பகுதிகளில் உற்பத்தியாகின்றன. இவைகள் இந்திய அளவில் மட்டுமின்றி, உலகஅளவிலும் புகழ்பெற்றவை. பொதுவாக பட்டுச்சேலைகளை சிறிது நேரம் மட்டுமே கட்டியிருக்க முடியும். நேரம் செல்லச்செல்ல உடல் வெப்பம் காரணமாக, பட்டுச் சேலைகள் வெப்பத்தை ஏற்படுத்தி உடலில் வியர்க்கத் தொடங்கும்.
இதனை தவிர்க்கும்விதமாக வந்ததுதான், கூறைப் பட்டுச்சேலைகள்! நாகை மாவட்டம் மயிலாடுதுறை கூறைநாட்டில், கூறைடெக்ஸ் பருத்தி பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி சங்கத்தில் உள்ள நெசவாளர்கள் நெய்த கூறைப்பட்டுச் சேலைகள் அதிக வரவேற்பைப் பெற்றன.
கோடையில் குளிர்ச்சியையும் குளிர்காலத்தில் கதகதப்பையும் தரும்வகையில் 80 விழுக்காடு பட்டு, 20 விழுக்காடு பருத்தி கலந்து உருவாக்கப்படுகின்ற இந்தச் சேலைகள் திருமண விழாவில் மணமகள் மாங்கல்ய தருணத்தின்போது உடுத்தும் பாரம்பரியமான கூறைச்சேலையாக புகழ்பெற்றது.
இச்சேலைகள் மயிலாடுதுறை கூறைநாட்டில் மட்டுமே பிரத்யேகமாக நெய்யப்படுபவையாகும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சிபுரத்திலிருந்து சோழ மன்னனால் வரவழைக்கப்பட்ட நெசவாளர்கள், மயிலாடுதுறை கூறைநாடு பகுதியில் குடியமர்த்தப்பட்டனர்.
இவர்கள் தயாரித்த பட்டுச்சேலைகள் கூறைப்பட்டு என்ற பெயரில் இன்றளவும் மக்களால் பெரிதும் விரும்பப்படுகின்றது. தனித்தனியாக நெசவு நெய்துவந்த நெசவாளர்களை ஒன்றிணைத்து 1965ஆம் ஆண்டு அன்றைய முதலமைச்சர் பக்தவத்சலத்தால் நெசவாளர் தொழில்கூடம் தொடங்கப்பட்டது.
அப்போது, நூற்றுக்கணக்கான தொழிலாளர்களுடன் இயங்கிவந்த பட்டு நெசவுக்கூடங்கள், தற்போது தொழில் நலிவடைந்து, 7 நெசவுத்தறிகள் மட்டுமே மிஞ்சியுள்ளன. ஒருவர், ஒரு சேலையை நெய்வதற்கு சுமார் ஒருவார காலம் ஆகிறது. இங்கு தயாரிக்கப்படும் சேலைகள் 4,500 ரூபாயில் தொடங்கி, 12 ஆயிரம் வரையில் விற்பனை செய்யப்படுகின்றன.
தற்போது, பழைய பொருட்களுக்கு மீண்டும் மவுசு கூடிவரும் நிலையில், கூறைநாடு சேலை உற்பத்தியை, அரசு உதவி செய்து, தொழிலுக்கு புத்துயிர் ஊட்ட வேண்டும் என்று உற்பத்தியாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். கைத்தறித் துறை அமைச்சரின் சொந்த மாவட்டமான நாகை மாவட்டத்தில், நலிவடைந்த நிலையில் உள்ள கூறைப்பட்டு உற்பத்தியை, அரசு கைகொடுத்து தூக்கிவிட வேண்டும் என்பதே நெசவாளர்களின் வேண்டுகோள்.