நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே நெய்க்குப்பை கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி கண்ணன் (44). இவர் அக்கிராமத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட நகரில் இடம் வாங்கி கூரை வீடு கட்டி மனைவி, இரண்டு குழந்தைகளுடன் வசித்துவருகிறார். அது புதிதாக உருவாகிய நகர் என்பதால் அப்பகுதிக்கு மின் இணைப்பு வழங்கப்படவில்லை.
அதுமட்டுமின்றி அந்தப் பகுதியில் ஆள் நடமாட்டமும் குறைவாகவே இருந்தது. மின்சார வசதி இல்லாததால் தனது வீட்டில் சோலார் மூலம் மின்சார வசதியை ஏற்படுத்தியிருந்தார் விவசாயி கண்ணன்.
இந்நிலையில் சோலார் மின்சக்தி இல்லாததால் விளக்குகள், மின்விசிறி அணைந்துள்ளன. இதனால் கண்ணன் வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்தினருடன் வீட்டு வாசலில் படுத்து உறங்கியுள்ளார். அப்பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாததால், அதை பயன்படுத்திய அடையாளம் தெரியாத நபர்கள் கண்ணனின் வீட்டின் பின்பக்கம் வழியாக கூரைமேல் ஏறி, கூரையை பிரித்து வீட்டுக்குள் இருந்த ஒன்பதரை பவுன் நகை, 3 லட்சம் ரொக்கப் பணத்தை திருடி சென்றுள்ளனர். இது குறித்து பெரம்பலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். நள்ளிரவில் நடைபெற்ற இக்கொள்ளை சம்பவம் அக்கிராம மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தனியார் பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்து - 31 மாணவர்கள் காயம்