மயிலாடுதுறை: சீர்காழி தாலுகா தைக்கால் கிராமத்தில் தனியார் மருத்துவமனை திறப்பு விழா நடைபெற்றது.
இதில் மனித நேய மக்கள் கட்சி நிறுவனர் பேரா.ஜவாஹிருல்லா கலந்து கொண்டு மருத்துவமனையை நிறைவேற்றினார்.
நிகழ்ச்சிக்குப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'அகில இந்திய அளவில் மருத்துவ சேர்க்கையில் 27 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கிய, ஒன்றிய அரசின் அறிவிப்பு வரவேற்கதக்கது. இது தமிழ்நாடு அரசு, முதலமைச்சரின் தொடர் கோரிக்கைக்கு கிடைத்த வெற்றியாகத்தான் உணரப்படுகிறது.
தமிழ்நாட்டைப்போல் இந்திய அளவிலும் அனைத்து தேர்வுகள், பணிகளில் 50 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க ஒன்றிய அரசு முன்வரவேண்டும்.
கர்நாடகத்தை ஆளும் பாஜக, மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என்கிறார்கள். அணை கட்டினால் தமிழ்நாடு பாதிக்கப்படும் என அனைத்து கட்சியினரும் குரல் கொடுத்து வருகிறோம்.
இந்நிலையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, கர்நாடகம் அணை கட்டுவதை எதிர்த்து உண்ணாவிரதம் இருப்பேன் என்கிறார். கர்நாடகத்தில் பணியாற்றியபோது தான் கன்னடர் எனப் பேசிய அண்ணாமலையின் அறிவிப்பு, மக்களை ஏமாற்றும் வெற்று நாடகம்.
பாஜக தலைவர் பிரதமர் மோடியிடம் நேரில் சென்று வலியுறுத்தலாம் அல்லது பிரதமர் வீட்டு முன் உண்ணாவிரதம் இருக்கட்டும். அதுவரை இவர்களின் அறிவிப்புகள் எல்லாம் நாடகம்தான்' என்றார்.
இதையும் படிங்க: ஜான்குமாருக்கு புதுச்சேரி பாஜக தலைவர் வாய்ப்பு?