மயிலாடுதுறை: நபிகள் நாயகம் குறித்து நுபுர் சர்மா மற்றும் நவீன் ஜிண்டால் ஆகியோர் தெரிவித்த கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தமிழகத்திலும் இஸ்லாமிய இயக்கங்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.
அவ்வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில், மாவட்ட அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் ஜமாத் கூட்டமைப்பின் சார்பில் இன்று ஒருநாள் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனையொட்டி நீடூர், வடகரை, சங்கரன்பந்தல், கிளியனூர், எலந்தங்குடி, தைக்கால், தேரழந்தூர், பொறையார் உள்ளிட்ட மாவட்டத்திலுள்ள அனைத்து இஸ்லாமிய வணிக நிறுவனங்களும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் காலை முதல் மூடப்பட்டுள்ளன.
மயிலாடுதுறையை அடுத்த வடகரையிலுள்ள இஸ்லாமியர்கள் தங்கள் கடைகளை அடைத்து கருப்பு கொடி பறக்கவிட்டு கண்டனத்தை வெளிப்படுத்தினர். மேலும், இன்று மாலை 3 மணி முதல் 6 மணி வரை அனைத்து மருந்தகங்களும் மூடப்பட உள்ளன. மேலும் மயிலாடுதுறையில் இன்று மாலை 4 மணி அளவில் மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படவுள்ளது.
இதையும் படிங்க: கொள்ளிடம் ஆறு தடுப்பணை பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்