நாகை: தமிழ்நாட்டில் தேர்தல் நாள் நெருங்குவதையொட்டி தேர்தலில் போட்டியிட விரும்புவோர் அனைவரும் தற்போது வேட்புமனு தாக்கல் செய்துவருகின்றனர். நேற்று (மார்ச்.15) மூகூர்த்த தினம் என்பதால் வேட்புமனு தாக்கல் செய்ய பெரும்பாலனோர் ஆர்வம் காட்டினர். அந்த வகையில், நாகை சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்ய சுயேட்சை வேட்பாளர் பாஸ்கரன், நாகப்பட்டிணம் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது, உதவி மையத்தில் தனது வேட்புமனு சரியாக உள்ளதா என அலுவலரிடம் சரிபார்த்துக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து 20 ரூபாய் நோட்டு கட்டுகளை எடுத்துக்கொண்டு தேர்தல் நடத்தும் அலுவலர் மணிவேலன் அறைக்குச் சென்ற அவர், அங்கு தனது வேட்பு மனுவையும், அதற்கு செலுத்த வேண்டிய கட்டணத் தொகையையும் சீர்வரிசை கொடுப்பதுபோல தட்டில் வைத்து வழங்கினார். தொடர்ந்து, 20 ரூபாய் நோட்டு கட்டுக்களை தனது உதவியாளர்களிடம் அளித்த மணிவேலன், பணம் சரியாக உள்ளதா எனப் பார்க்கச் சொன்னார். நீண்ட நேரமாக அப்பணத்தை எண்ணிய உதவியாளர்கள் பணம் சரியாக இருப்பதாகத் தெரிவித்தனர்.
இதனையடுத்து, அவரது வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. 20 ரூபாய் நோட்டு கட்டுகளை கொண்டுவந்து தேர்தல் நடத்தும் அலுவலரையும், அங்குள்ளவர்களையும் திரும்பிப் பார்க்க வைத்த சுயேட்சை வேட்பாளர் அனைவரின் பேசுபொருளாகவும் மாறினார்.