நாகப்பட்டினம்: திருக்குவளை அடுத்த திருவாய்மூர் பகுதியை சேர்ந்தவர் எம்.கே. ராஜ்குமார் (47). விவசாயியான இவர் தனது சொந்த விவசாய நிலத்தில் மேட்டூர் அணை திறக்கப்பட்ட கால கட்டத்தில் சுமார் 30 ஏக்கர் மற்றும் குத்தகைக்கு எடுக்கப்பட்ட 20 ஏக்கர் அளவிலான விளைநிலத்தில் குறுவை சாகுபடி செய்திருந்தார்.
இந்நிலையில் சாகுபடி செய்யப்பட்ட குறுவை நெற்பயிர்கள் பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைந்ததால் கருகி எரிந்து நாசமாகியுள்ளது. இந்நிலையில் நேற்று வழக்கம் போல் வயலுக்கு சென்ற ராஜ்குமார், காய்ந்த நெற்பயிர்களை டிராக்டர் மூலம் அளித்து சம்பா சாகுபடிக்கான நேரடி நெல் விதைப்பு பணியை மேற்கொண்டு உள்ளார்.
அப்போது திடீரென நெஞ்சுவலி வந்து வயலிலேயே மயக்கம் அடைந்துள்ளார். அவரை சக விவசாயிகள் மீட்டு திருக்குவளையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கிருந்து உடனடியாக மேல் சிகிச்சைக்கு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட ராஜ்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழந்த விவசாயி ராஜ்குமாருக்கு ரூபவதி என்ற மனைவியும், எட்டாம் வகுப்பு படிக்கும் பரத்வாஜ் என்ற மகனும் உள்ளனர்.
மேலும் விவசாயி ராஜ்குமார் இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்காக வங்கியில் ஐந்து லட்சம் கடன் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. பயிர்கள் கருகியதால் கடனை திரும்ப செலுத்த முடியாது என்ற கவலை காரணமாகவே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக உறவினர்களும், சக விவசாயிகளும் புகார் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: 6 வருட காதல்; பெற்றோர் அறிவுரையால் மனமாறிய ஆசிரியை - காதலன் செய்த கொடூர செயல்!