திமுக சார்பில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அதன்படி, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்கும் ஹைட்ரோகார்பன் திட்டத்தை திரும்பப் பெறக்கோரியும், காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வலியுறுத்தியும் திமுக சார்பில் நாகையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாகை மாவட்டம் அவுரித்திடலில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், தமிழ்நாடு அனைத்து விவசாய கூட்டமைப்பினர், திமுகவைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இதேபோல், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திருவாரூர் சட்டப்பேரவை உறுப்பினரும் திமுக மாவட்ட செயலாளருமான பூண்டி கலைவாணன் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திமுக தொண்டர்கள் ஹைட்ரோகார்பனுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர் போராட்டத்தில் திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினர் ஆடலரசன், மாவட்ட ஊராட்சித் தலைவர் பால சுப்பிரமணியன், திருவாரூர் ஒன்றிய பெருந்தலைவர் தேவா உள்ளிட்ட ஏராளமானோர் திமுக தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என அறிவித்த மத்திய அரசை கண்டித்தும், அதற்கு கண்டனம் தெரிவிக்காத தமிழ்நாடு அரசை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதையும் படியுங்க: