நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி சனிக்கிழமை வரை மூன்று நாள்கள் டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மயிலாடுதுறையில் டாஸ்மாக் மதுபான கடைகள் முன்பு சட்டவிரோதமான முறையில் மது விற்பனை நடைபெறுவதாகத் தேர்தல் பறக்கும் படையினருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, கூட்டுறவுத் துறை சார் பதிவாளரும், பறக்கும் படை அலுவலருமான நடராஜன் தலைமையிலான பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், மயிலாடுதுறை காமராஜர் பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், கூறைநாடு பகுதிகளில் அமைந்துள்ள அரசு மதுபான கடைகளின் முன்பு சட்டவிரோதமான முறையில் மது விற்பனை நடைபெறுவது தெரியவந்தது.
நிகழ்விடத்துக்கு அலுவலர்கள் சென்றதையடுத்து, மது விற்பனையில் ஈடுபட்டவர்கள் மதுபாட்டில்களை அங்கேயே விட்டுவிட்டுத் தப்பிச் சென்றனர்.
இதையடுத்து, 15 ஆயிரம் ரூபாய் மதிப்புடைய மொத்தம் 85 மதுபாட்டில்களைக் கைப்பற்றிய பறக்கும் படை அலுவலர் நடராஜன் அவற்றை நகராட்சித் தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆணையருமான பாலுவிடம் ஒப்படைத்தார்.
இதையும் படிங்க: காதலித்த பெண்ணுக்குத் திருமணம்: மனமுடைந்த உணவக மேலாளர் தற்கொலை!