தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தின் செயற்குழுக் கூட்டம் இன்று நாகையில் நடைபெற்றது. இதில், தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் எடுக்க வேதாந்தா, ஓஎன்ஜிசி நிறுவனங்களுக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வழங்கிய அனுமதியை தடை செய்யக்கோரி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு விவசாய சங்க கூட்டு இயக்கத்தின் தலைவர் காவிரி தனபாலன், தமிழ்நாட்டில் கிடப்பில் போடப்பட்டுள்ள குடி மராமத்து பணிகளை தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று தமிழக அரசு உடனடியாகத் தொடங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தி, விழுப்புரம், நாகை, கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், மாவட்டங்களில் விவசாயிகள் அனைவரும் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.