மயிலாடுதுறை: சீர்காழி அருகே அகர பெருந்தோட்டம் கிராமத்தில் இன்று (ஏப்ரல் 24) நடைபெற்ற நிகழ்ச்சியில் மதிமுக தலைமை கழகச் செயலாளர் துரை வைகோ கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "திமுக அரசு பதவியேற்றபோது கரோனா இரண்டாவது அலை மற்றும் மழை வெள்ளப்பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு சவால்களை சந்தித்தது. தற்போது வெற்றிகரமாக ஆட்சி செய்து வருகிறது. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட 70 விழுக்காடு அறிவிப்புகளை நிறைவேற்றியுள்ளார்கள். ஆகவே, இந்த ஆட்சியை சிறப்பான ஆட்சி என்று நாங்கள் கருதுகிறோம்.
தமிழ்நாட்டில் நிலவும் மின்வெட்டிற்கு முக்கியக்காரணம் ஒன்றிய அரசின் தொகுப்பில் இருந்து வரும் மின்சாரம் குறைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து நிலக்கரி இறக்குமதியில் ஒன்றிய அரசின் கொள்கையில் பல்வேறு பிரச்னைகள் உள்ளன. அதனால், தற்போது மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. ஆனால், எதிர்க்கட்சிகள் அவதூறான கருத்துகளைப் பரப்பி வருகின்றனர். மின்வெட்டுக்கு முக்கியக் காரணம் ஒன்றிய அரசுதான் என்பதை மக்கள் உணர வேண்டும்.
முதலமைச்சர் தாயுள்ளத்தோடு பாதுகாத்து வருகிறார்: தமிழ்நாட்டில் சமூக நீதியும், மத நல்லிணக்கமும் உள்ளது. அதனால்தான் எவ்வளவு பெரிய விழாக்களும் அமைதியாகவே நடைபெற்று வருகின்றன. வடமாநிலங்களில் ராம நவமி, அனுமன் ஜெயந்தி போன்ற விழாக்களில் கலவரங்கள் நடைபெற்றன. இதுபோன்ற சூழல் தமிழ்நாட்டில் ஏற்பட்டு விடக்கூடாது.
வலதுசாரி சிந்தனைகள் மற்றும் மதவாத சக்திகளை தமிழ்நாட்டில் அனுமதிக்கக்கூடாது என்பதே எங்கள் கூட்டணியின் முதல் நோக்கம். எங்கள் கூட்டணி பலமாக உள்ளது. இந்தக் கூட்டணி தொடரும். இலங்கையிலுள்ள மக்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து தமிழர்கள் அகதிகளாக வந்து கொண்டிருக்கிறார்கள். அவ்வாறு வருபவர்களை ஒன்றிய அரசு அகதிகளாக அங்கீகரிக்க வேண்டும். இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் அனுப்பிய கடிதத்திற்கு ஒன்றிய அரசு இதுவரை எவ்விதப் பதிலும் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது.
உள்ளாட்சித்தேர்தலை பொறுத்தவரை சில ஏமாற்றங்கள் இருந்தன. அதுபோல் திமுகவிலும் அதே நிலைதான் தொடர்ந்தது. எனவே, இனிவரும் காலங்களில் அது போன்ற நிலை வராது. முதலமைச்சர் எங்களை தாயுள்ளத்தோடு பாதுகாத்து வருகிறார். இனிவரும் தேர்தல்களிலும் நாங்கள் ஒற்றுமையோடு பயணிப்போம்" என்று கூறினார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டை உலுக்கும் மின்வெட்டு - காலம் திரும்புகிறதா?