மயிலாடுதுறை: குத்தாலம் அருகே உள்ள தேரழுந்தூரில் கம்பராமாயணம் எழுதிய கம்பர் பிறந்ததாகக் கூறப்படும் நிலையில், அந்த இடத்தில் 1980களில் தொல்லியல் துறை ஆய்வு மேற்கண்டது. பின்னர், அந்த இடம் கம்பர் மேடு என்ற பெயரில் தொல்லியல் துறை வசம் உள்ளது.
இன்று (ஜனவரி 17) திருச்சியில் இருந்து சாலை மார்க்கமாக தேரழுந்தூர் வந்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து கம்பர் மேடு பகுதியில் தனது மனைவியுடன் சுற்றிப் பார்த்த தமிழக ஆளுநர், வைணவ திவ்ய தேசங்களில் பத்தாவது திவ்ய தேசமான தேரழந்தூர் ஆமருவியப்பன் ஆலயத்தில் தரிசனம் மேற்கொண்டார் அவருக்கு ஆலயம் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து கம்பர் மணி மண்டபத்தில் அமைந்துள்ள கவிச்சக்கரவர்த்தி கம்பர் திருவுருவ சிலைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து கம்பர் கோட்டை மணிமண்டபத்தில் தஞ்சை கோட்ட ஹிந்து ஆலயப் பாதுகாப்பு இயக்கம் சார்பில் அயோத்தி ராமனும், தமிழ் கம்பனும் என்ற நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார்.
மேலும், கம்பரின் பெருமைகளை நிலை நிறுத்த தொடர்ந்து செயலாற்றி வரும் பல்வேறு நபர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவித்தார். மாணவ மாணவிகளின் கம்பராமாயணத்தின் பாராயணம் நடைபெற்றது. பின்னர் இந்நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுகையில், அனைவருக்கும் வணக்கம் என தமிழில் கூறி பேச்சைத் தொடங்கினார். “பாரதம் முழுவதும் ராம மயம் ஒலித்துக் கொண்டிருக்கிறது. ராமனின் அதிதீவிர பக்தர் ஆன கம்பன் பிறந்த மண்ணில் பேசுவதைப் பாக்கியமாகக் கருதுகிறேன்.
பழமை வாய்ந்த தமிழ் இலக்கியமான சிலப்பதிகாரம், மணிமேகலை, புறநானூறு, அகநானூறு அனைத்திலும் ராமரின் புகழ் ஒலித்துக் கொண்டே உள்ளது. தமிழ் இலக்கியங்களைப் படிக்கும்போது ஆச்சரியங்களை ஏற்படுத்துகிறது. நமது அரசியல் அமைப்பு அடிநாதம் ராம ராஜ்ய தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது. நாம் ராம ராஜ்யத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம். கம்பரைப் பெருமைப்படுத்த ராமராஜ்யம் அவசியமானது.
ராமரைத் தெரிந்து கொள்ளும் வகையில் கம்பராமாயணத்தை முதலில் தமிழில் அழகாக எடுத்துரைத்ததன் மூலம் சாதாரண மனிதன் மனதிலும் ராமர் பற்றிய எண்ணம் சென்றடைந்தது. அதனால் தான், பல்வேறு மொழிகளில் கம்பராமாயணம் மொழிபெயர்க்கப்பட்டது. நம் பாரத தேசம் அரசியலமைப்புகளைத் தாங்கிய நாடு அல்ல பாரதம் என்பது ஒரே குடும்பம் இங்கு பல்வேறு மொழி கலாச்சாரம் பண்பாடு நாகரிகம் கொண்ட மக்கள் ஒரே குடும்பமாக வாழ்ந்து வருவதற்கு அடிப்படை ராமன்தான்.
ராம ராஜ்ஜியத்தை நோக்கி நம் பாரதம் சென்று கொண்டிருக்கும் சமயத்தில் கம்பரின் பெருமையை நிலைநாட்டுவது அவசியமாகிறது. பாரதத்தின் ஆன்மா ஸ்ரீராமர் என்றும் கம்பரின் புகழை உயர்த்திப் பிடிப்போம்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: "ராமர் மயமாகி வரும் இந்தியா" - ஆளுநர் ஆர்.என்.ரவி!