நாகை மாவட்டம், மாதானம் மேமாத்தூர் வரை 29 கிலோ மீட்டர் தூரத்திற்கு விளைநிலங்களை நாசப்படுத்தி குழாய் பதிக்கும் கெயில் நிறுவனம் பணிகளை மேற்கொண்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால், அதனை அரசு கண்டுகொள்ளாமல் காவல்துறை உதவியுடன் விவசாயிகளை அச்சுறுத்தி கெயில் நிறுவனத்திற்கு பாதுகாப்பு அளித்து வருவதால் குழாய் பதிக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தரங்கம்பாடி தாலுக்கா முக்கரும்பூர் ஊராட்சியில் 50 ஏக்கருக்கு மேல் விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்துள்ளனர். பருத்தி பயிர்கள் தற்போது காய் வைத்துள்ள நிலையில் அந்தச் செடிகளை அழித்து குழாய் பதிப்பு பணிகளை மேற்கொண்டால், பெரும் நஷ்டம் ஏற்படும் என்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். முக்கரும்பூர் விவசாயிகள் 50க்கும் மேற்பட்டோர் தங்கள் வயல்களில் பூச்சிமருந்து பாட்டில்களுடன் இறங்கி கெயில் குழாய் பதிப்பை அரசு தடுத்து நிறுத்தக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், "முக்கறும்பூர் ஊராட்சியில் 50 ஏக்கருக்கு மேல் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. குறுவை நடவு பணிகளை விவசாயிகள் மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் எந்தவித முன்னறிவிப்பின்றி கெயில் நிறுவனம் குழாய் பதிக்கும் பணிகளுக்காக பயிர்களை நாசப்படுத்தி வருகிறது. பயிர்களை நாசப்படுத்தி குழாய் பதிக்கும் பணிகளை மேற்கொண்டால் விவசாயிகள் அனைவரும் வயலில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. இதனை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காகத்தான் விவசாயிகள், பெண்கள், கையில் பூச்சிமருந்து பாட்டில்களுடன் பருத்தி வயலில் ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளோம். விவசாய விளை நிலங்களை நாசப்படுத்தி குழாய் பதிப்பதை தமிழக அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்" என்றனர்.