நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள மேலமாப்படுகை கன்னித்தோப்பு தெருவைச் சேர்ந்தவர் விஜய்(24). இவர் பாலிடெக்னிக் முடித்துவிட்டு சென்னையில் பணிபுரிந்து வந்தார்.
தற்போது ஊரடங்கு காரணமாக மேலமாப்படுகையில் உள்ள தனது வீட்டில் இருந்து வந்த நிலையில், நேற்று (ஆகஸ்ட் 29) விஜய் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, சாலையில் நடந்துச் சென்ற அதே பகுதியைச் சேர்ந்த மனோகர்(55) என்பவர் மீது வாகனம் லேசாக உறசியது. இது தொடர்பாக இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டு மனோகர் தரப்பினர் விஜயை தாக்கினர்.
இதையடுத்து, விஜய் தனது ஆதரவாளர்களுடன் மனோகர் வீட்டிற்குச் சென்று தகராறு செய்தார். அப்போது ஏற்பட்ட மோதலில் மனோகர், செல்லமனோ, அன்புச்செல்வன், சுந்தர்ராஜன், கார்த்தி உள்ளிட்ட சிலர் விஜய் மற்றும் அவரது உறவினர்களை தாக்கினர். அப்போது, மனோகர் தரப்பினர் விஜயை கத்தியால் குத்தினர்.
இதில் படுகாயமடைந்த விஜயை அருகில் இருந்தவர்கள் மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் உள்ளிட்ட காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு மனோகர்(55), செல்லமனோ(25), அன்புச்செல்வன்(23), சுந்தர்ராஜன்(44) ஆகியோரை கைது செய்தனர். மேலும், தலைமறைவாகியுள்ள கார்த்தி வழக்கில் தொடர்புடைய மேலும் 10 நபர்களை தேடி வருகின்றனர்.