மயிலாடுதுறையில் முன்னாள் வன்னியர் சங்க நிர்வாகி கண்ணன் படுகொலை சம்பவத்தின் தொடர்ச்சியாக அசம்பாவிதம் ஏற்படாதவாறு ஏராளமான காவல் துறையினர் மயிலாடுதுறை நகர் முழுவதும் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் மயிலாடுதுறை நகரப்பகுதிகளில் உள்ள ஐந்து டாஸ்மாக் மதுபானக்கடைகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்டுள்ளன. மயிலாடுதுறை அரசு மருத்துவமனைப்பகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்க பொறுப்பாளர்கள் குவிந்துள்ளதால் நாகை, திருவாரூர், மயிலாடுதுறையில் காவல் துறையினர் ஏராளமானோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் வன்னியர் சங்க மாநிலத்தலைவர் பு.தா.அருள்மொழி, துணைத்தலைவர் ம.க. ஸ்டாலின், உழவர் பேரியக்க தலைவர் ஆலயமணி மற்றும் மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு வந்து படுகொலை செய்யப்பட்ட கண்ணனின் உறவினர்களிடம் ஆறுதல் கூறினர்.
தொடர்ந்து மயிலாடுதுறை டிஎஸ்பி வசந்தராஜிடம் மயிலாடுதுறையில் கூலிப்படை இயங்குவதாகவும்; இதனால் பல்வேறு கொலைச்சம்பவங்கள் அரங்கேறி உள்ளதாகவும் குற்றஞ்சாட்டினார். மேலும் டிஎஸ்பி தலைமையிலான காவல் துறையினரிடம் கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.
இந்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ். நிஷாவிடம் செல்போனில் பேசி கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், உடற்கூராய்வு முடிந்தும் உடலை வாங்க மறுத்து வன்னியர் சங்க நிர்வாகிகள் மயிலாடுதுறையில் காவல் நிலையம் சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: ஈரோடு அருகே நிறம் மாறிய நிலத்தடி நீர்... ஆய்வுசெய்த மாசு கட்டுப்பாட்டு வாரியம்