நாகப்பட்டினம் பெருமாள் தெற்கு வீதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (75). முன்னாள் ராணுவ வீரரான இவர் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் இன்று வெகு நேரமாகியும் ராஜ்குமார் வீடு திறக்கப்படவில்லை. இதனால், சந்தேகமடைந்த பக்கத்து வீட்டுக்காரர்கள், அவரது வீட்டின் கதவை தட்டிப் பார்த்துள்ளனர். அப்போதும் கதவு திறக்காததையடுத்து அருகில் இருந்தவர்கள் நாகை நகர காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ராஜ்குமார் வீட்டின் கதவை உடைத்து பார்த்ததில் ராஜ்குமார் கழுத்தில் கேபிள் ஒயர் சுற்றப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்தது. இதனையடுத்து, இறந்தவரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், வீட்டில் தனியாக இருந்த ராஜ்குமாரை கொலை செய்தது யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்து வந்தனர். விசாரணையில் மிகவும் பழுதடைந்திருந்த ராஜ்குமார் வீட்டை கடந்த சில மாதங்களாக நாகையைச் சேர்ந்த கஜேந்திரன் என்பவர் சீர்செய்து கொடுத்ததாகவும், அதற்கான முழுக்கூலியை ராஜ்குமார் கொடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ராஜ்குமார், கஜேந்திரனிடையே ஏற்பட்ட தகராறில், ராஜ்குமாரை ஆத்திரத்தில் கஜேந்திரன் கொலை செய்துள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதைத்தொடர்ந்து கஜேந்திரன் தான் கொலை செய்ததை ஒப்புக்கொண்டு, நாகை நகர காவல் நிலையத்தில் சரணடைந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - ஜுன் மாதத்தில் அட்டவணை வெளியீடு!