மயிலாடுதுறை: அம்ரீத் பாரத் ரயில் நிலையத் திட்டத்தின் கீழ், தெற்கு ரயில்வேயில் 90 ரயில் நிலையங்களை மேம்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக ரூ.716.84 கோடி மதிப்பில், 104 கருத்துருக்களுக்கு ரயில்வே வாரியம் கடந்த மே மாதம் அனுமதி அளித்துள்ளது.
இத்திட்டத்தில், மயிலாடுதுறை ரயில் நிலையம் சுமார் ரூ.20 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட உள்ளது. இதற்காக மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் வரும் ஆகஸ்ட் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள தொடக்க விழாவில் பாரத பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக பங்கேற்று உரையாற்ற உள்ளார்.
இந்நிலையில், மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து, திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அன்பழகன் மற்றும் அதிகாரிகள் இன்று (ஆகஸ்ட் 2) ஆய்வு செய்தனர். அப்போது அவரைச் சந்தித்த திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினரும், முன்னாள் எம்எல்ஏ குத்தாலம் பி.கல்யாணம் அடுக்கடுக்காக ரயில்வே அதிகாரிகளிடம் கேள்விகளை எழுப்பினார்.
அப்போது முன்னாள் எம்எல்ஏ கல்யாணம் வாதிட்டபோது , “ மயிலாடுதுறையில் இருந்து திருக்கடையூர் வழியாக தரங்கம்பாடிக்கு ஏற்கெனவே இயங்கி வந்த ரயிலை அதே தடத்தில் மீண்டும் இயக்க வேண்டும் என ஏற்கெனவே மனு அளித்து உள்ளோம்.
இதையும் படிங்க: 'மாணவர்களை மற்ற மாணவர்களோடு ஒப்பிடாதீர்கள்' - அமைச்சர் அன்பில் மகேஷ் பெற்றோர்களுக்கு அறிவுரை!
மேலும், மயிலாடுதுறையில் இருந்து காரைக்கால், நாகப்பட்டினம், திருவாரூர் மார்க்கமாக புதிய ரயில் பாதை அமைக்கத் தேவையான நிலத்தை கையகப்படுத்த தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில ஆளுநர்கள் மற்றும் புதுச்சேரி முதலமைச்சர் ஆகியோர் ஒப்புதல் அளித்துள்ளனர். இதுகுறித்து மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என்று குற்றம்சாட்டினார்.
அவரது கேள்விகளுக்கு பதிலளிக்கத் திணறிய ரயில்வே மேலாளர் அவரிடம் இருந்து மீண்டும் மனுக்களை பெற்றுக்கொண்டு, இதுகுறித்து ரயில்வே போர்டுக்கு தெரியப்படுத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி அவ்விடத்தை விட்டுச் சென்றார். மயிலாடுதுறை ரயில் நிலையத்துக்கு அவ்வப்போது வந்து செல்லும் அதிகாரிகளிடம் பொதுமக்களும், ரயில் பயணிகள் சங்கத்தினரும் பல்வேறு கோரிக்கைகள் வைப்பதும், அவற்றை பரிசீலிப்பதாக கூறிச் செல்லும் அதிகாரிகள் அப்படியே கிடப்பில் போடுவதும் வாடிக்கையாக உள்ளதாக அவ்வூர் மக்கள் கூறுகின்றனர்.
திட்டத்தின் சிறப்பம்சங்கள்: இந்த திட்டத்தில், பயணிகள் காத்திருப்போர் அறைகள் மேம்படுத்தப்பட்டு ரயில் நிலையத்தில் சிற்றுண்டிக்கடைகள் அல்லது சிறிய கடைகள் அமைக்கப்படும். ஒரு ரயில் நிலையத்தில், "ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு" திட்டத்தின் கீழ் குறைந்த பட்சம் 2 கடைகள் திறக்கப்படும்.
பின்னர், ரயில் நிலையத்தின் முக்கிய இடங்களில் ரயில் வருகை, புறப்பாடு உள்ளிட்ட விவரங்களைக் காட்சிப்படுத்தும் பலகைகள் பொருத்தப்படும். அனைத்துப் பகுதிகளிலும் 600 மீட்டர் நீளம் கொண்ட உயர்நிலை நடைமேடை அமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: சென்னையில் டம்மி செல்போன் விற்று ஏமாற்றிய இரு வடமாநிலத்தவர் கைது!