டெல்டா மாவட்டங்களில் நிவர் மற்றும் புரெவி புயலால் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் சம்பா மற்றும் தாளடி விவசாயம் பாதிப்படைந்தது. இதனைத் தொடர்ந்து டெல்டா மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிப்படைந்த வயல்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று பார்வையிட்டு, இடுபொருள் மானிய நிவாரணத்தை அறிவித்தார். முதலமைச்சர் உத்தரவின்பேரில் ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.20ஆயிரம் நிவாரணம் வழங்கப்பட்டுவருகிறது.
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகாவில் முதலமைச்சர் புயல், மழையால் பாதிக்கப்பட்ட சம்பா தாளடி பயிர்களை பார்வையிட்ட நல்லாடை கிராமத்தில் நிவாரணமாக ஏக்கருக்கு ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளதாகவும், அருகருகே உள்ள கிராமங்களில் குறைந்த அளவில் பாதிக்கப்பட்ட விவசாயிகளிடம் பணம் பெற்றுக்கொண்டு அதிகளவில் நிவாரண தொகையை ஒதுக்குவதாகவும் அப்பகுதி வேளாண் துறை அலுவலர் மீது விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
தற்போது பருவம் தவறி பெய்த மழையில் நல்லாடை கிராமத்தில் விவசாயம் முழுமையாக பாதிக்கப்பட்டு, விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளதாகவும், உடனடியாக நல்லாடை கிராமத்தில் விவசாய அலுவலரின் செயல்பாடு குறித்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து முழு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் நல்லாடை பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து செம்பனார்கோவில் வட்டார வேளாண்மைத் துறை அலுவலர்கள் கூறுகையில், ”வருவாய் துறையினர் பயிர் சேத பாதிப்பு குறித்து அளித்த கணக்கீட்டின்படி இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டுள்ளது. இதில், முறைகேடு நடைபெற வாய்ப்பில்லை. வேளாண் துறை அலுவலர்கள் முறைகேட்டில் ஈடுபடுவது குறித்து தகுந்த ஆதாரத்துடன் விவசாயிகள் தெரிவித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ‘தென்மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும்’ - சென்னை வானிலை ஆய்வு மையம்!