மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான 1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாயூரநாதர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு 1972ஆம் ஆண்டு மூன்று வயது குட்டியாக அபயாம்பிகை யானை அழைத்து வரப்பட்டது.
மூன்று தலைமுறைகளாக யானை பாகன்கள் குடும்பத்தினர், இந்த அபயாம்பிகை யானையைப் பராமரித்து வருகின்றனர். விழாக் காலங்களில் உற்சவ மூர்த்தி புறப்பாட்டின்போது, சுவாமிக்கு முன்னர் யானை அபயாம்பாள் சென்றால்தான் விழா களைகட்டும் என்கின்றனர், கோயில் நிர்வாகிகள்.
50 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்களுக்கு செல்லப் பிள்ளையாக அபயாம்பிகை யானை இருந்து வருகிறது. அபயாம்பிகை காலில் கொலுசும், குளிப்பதற்கு என மிகப்பெரிய ஷவர், யானை கொட்டகையில் காற்று வருவதற்காக ராட்சத மின் விசிறி என பல்வேறு வசதிகளை கோயில் நிர்வாகம் ஏற்படுத்தி தந்துள்ளது.
இந்நிலையில், வளர்ப்பு யானைகள் பராமரிப்புச் சட்ட விதிகளின்படி, கோயில் யானைகள் முறையாக பராமரிக்கப்படுகின்றதா என்பது குறித்து மாவட்ட வனத்துறை அலுவலர் அபிஷேக் தோமர் தலைமையிலான குழுவினர் நேற்று (நவ.22) ஆய்வு செய்தனர்.
அப்போது, கோயில் யானை அபயாம்பிகை பராமரிக்கப்படும் இடம், யானைக்கு வழங்கப்படும் உணவுகள், யானை தினசரி முறையாக நடைபயிற்சி கூட்டிச் செல்லப்படுகிறதா, முறையாக பராமரிக்கப்படுகிறதா, தேவையான அளவு உணவு வழங்கப்படுகிறதா, யானையிடம் ஏதேனும் மாற்றங்கள் தென்படுகிறதா, மாதாந்திர மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறதா, உரிய நடைபயிற்சி அளிக்கப்படுகிறதா என்பன உள்ளிட்ட தகவல் குறித்து ஆய்வு செய்தனர்.
மேலும், கோயில் துணை கண்காணிப்பாளர் கணேசன் மற்றும் யானை பாகன் செந்தில் ஆகியோரிடம் யானை குறித்து கேட்டறிந்தனர். தற்போது யானை பராமரிக்கப்பட்டு வரும் கொட்டகை இல்லாமல், தனியாக வேறொரு இடத்தில் விஸ்தாரமாக காற்று வசதியுடன் கூடிய ஷெட் அமைக்க கோயில் நிர்வாகத்தினரிடம் ஆய்வுக் குழுவினர் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்த ஆய்வின்போது, சீர்காழி வனச்சரக அலுவலர் ஜோசப் டேனியல், வனவர் கதாநாயகன், வனவிலங்கு ஆர்வலர் சிவகணேசன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். இதேபோல், தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் உலகப் புகழ் பெற்ற ஸ்ரீ அபிராமி சமேத ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது.
தருமபுரம் ஆதீனத்திற்குச் சொந்தமான இக்கோயிலில், அபிராமி என்ற பெண் யானை பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்த யானையை மாவட்ட வனத்துறை அலுவலர் அபிஷேக் தோமர் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்து, முறையாக யானைக்கு அனைத்து வசதிகளும் செய்து தரப்படுகிறதா உள்ளிட்ட பல்வேறு விவரங்களை யானை பாகனிடம் கேட்டறிந்தனர்.
இதையும் படிங்க: ஈரோடு பிச்சைக்காரன் பள்ளம் ஓடை பாதிப்பு; ரூ.7 கோடி மதிப்பில் புதிய திட்டத்திற்கு பரிந்துரை - அமைச்சர் முத்துசாமி தகவல்!