மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் ஆசிரியர் தினவிழாவை முன்னிட்டு ஆசிரியர்களுக்கு டாக்டர். ராதாகிருஷ்ணன் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
அதனை தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பாடுபட்டு நல்லாசிரியராக திகழ்ந்த ஐந்து ஆசிரியர்களுக்கு டாக்டர். ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதினை மாவட்ட ஆட்சியர் லலிதா வழங்கினார்.
சீர்காழி, சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி இயக்குநர் முரளிதரன், இனாம்சீயாளம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் சண்முகசுந்தரம், மங்கைமடம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் இராசசேகர், கொற்கை அரசு மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் அப்துல்ரகீம், சீர்காழி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் பா.ஜோஸ்வா பிரபாகர சிங் ஆகிய ஐந்து ஆசிரியர்களுக்கு தலா ரூ.10 ஆயிரத்திற்கான காசோலை, வெள்ளிபதக்கம் மற்றும் சான்றிதழ் அடங்கிய நல்லாசிரியர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார், முதன்மை கல்வி அலுவலர் மதிவாணன், மாவட்ட கல்வி அலுவலர் குமார், மாவட்ட ஆட்சியரக மேலாளர் சங்கர் மற்றும் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.