மயிலாடுதுறை: தொடர் கனமழையால் அனைத்து பாசன மற்றும் வடிகால் வாய்க்கால்களிலும், முழுக் கொள்ளளவுடன் மழை வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதனால், பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் நடவுசெய்யப்பட்ட சம்பா, தாளடி பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளன. வடிகால் வாய்க்கால்கள் முறையாகத் தூர்வாரப்படாததால் பல கிராமங்களில் உள்ள வயல்களில் மழைநீர் தேங்கியுள்ளது.
மழைநீரில் மூழ்கிய சம்பா பயிர்கள்
குறிப்பாக, பொன்னூர், பாண்டூர், அருண்மொழித்தேவன், உக்கடை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வடிகால் வாய்க்காலாக விளங்கும் எல்லை வாய்க்கால் தூர்வாரப்படாததால், ஆயிரக்கணக்கான ஏக்கர் சம்பா பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
கடந்த மாதம் இந்தப் பகுதியில் பருவம் தவறி பெய்த மழையால் நடவுசெய்யப்பட்ட சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்த நிலையில், விவசாயிகள் உரமிட்டுப் பயிர்களைக் காப்பாற்றினர்.
500 ஏக்கர் நெற்பயிர்கள் மூழ்கின
தற்போது, மீண்டும் வடகிழக்குப் பருவமழை காரணமாக கடந்த 15 நாள்களாகப் பெய்த கனமழையால் உக்கடை கிராமத்தில் 500 ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி அழுகியுள்ளன. இங்கு வயல்களில் தேங்கிய மழைநீர் வடிய வழியின்றி ஏரிபோல் காட்சி அளிக்கிறது.
மழைநீரை வடியவைக்க எல்லை வாய்க்காலில் அடர்ந்து படர்ந்திருந்த, ஆகாயத் தாமரைகளை விவசாயிகள் அகற்றியும் மழை வெள்ளநீர் வடியாததால், உக்கடை கிராம விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
வடிகால்களைத் தூர்வர கோரிக்கை
பயிர்ச் சேதங்களைப் பார்வையிட வந்த மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜியிடம், அழுகிய பயிர்களைக் காண்பித்து விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். மேலும், எல்லை வாய்க்காலைத் தூர்வாரி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கைவிடுத்தனர்.
இதையும் படிங்க: TN Weather Update: காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடந்தது