கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கில் நாடு முழுவதும் கடந்த மார்ச் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, தினசிரி கூலி தொழிலாளர்கள், ஏழை எளிய மக்கள் பொருளாதார ரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கை மே 17ஆம் தேதி வரை நீட்டித்த மத்திய அரசு, அதில் சில தளர்வுகளை ஏற்படுத்தியது.
இந்த அறிவிப்பின்மூலம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லலாம் என்றபோதிலும், தமிழ்நாட்டில் தற்போது மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க போகமுடியாத சூழல் நிலவுகிறது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய தேசிய மீனவர் பேரவையினர், ஊரடங்கு உத்தரவை ஏற்று, கடந்த 45 நாள்களாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் வீட்டில் முடங்கி உள்ளனர்.
இந்நிலையில் தமிழ்நாடு உள்ளிட்ட கிழக்குக் கடலோர மாநிலங்களில், ஏப்ரல் 14ஆம் தேதி முதல் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியதால், பெரும்பாலான மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு, தடைக்காலங்களில் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் நாகை உள்ளிட்ட 13 கடலோர மாவட்ட மீனவர்களுக்கு, மீன்பிடி தடைக்காலங்களில் தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் நிவாரணம் ஐந்தாயிரம் ரூபாயை, 15 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலத்தை கடைப்பிடிக்கும் மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவுள்ளதால், தமிழ்நாடு அரசு மீனவ குடும்பத்தினருக்கு நாளொன்றுக்கு 250 ரூபாய் வீதம் 15 ஆயிரம் ரூபாய் நிவாரணத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதையும் பார்க்க: பொருளாதார மீட்டெடுப்புத் திட்டத்தை அறிவிக்கத் தயாராகும் இந்தியா!