நாகை மாவட்டம் பூம்புகாரைச் சேர்ந்த மீனவர் லெட்சுமணன். இவர் வேதாரண்யம் அருகேயுள்ள வெள்ளப்பள்ளம் கிராமத்தில் தங்கி மீன்பிடி தொழில் செய்துவந்தார். பூம்புகாரைச் சேர்ந்த மீனவர்கள், வெளியூரில் தங்கி மீன்பிடிக்க கிராம பஞ்சாயத்தார் தடை விதித்து இருந்தனர்.
ஆனால் லெட்சுமணனின் குடும்பத்தினர் ஊர்கட்டுப்பாட்டை மீறி வெளியூரில் தங்கி மீன்பிடி தொழில் செய்துவந்த காரணத்தால், கிராம பஞ்சாயத்தார் கடந்த வாரம் அவருக்கு 20 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து ஊரைவிட்டு ஒதுக்கி வைத்தனர். மேலும் இவர்கள் குடும்பத்துடன் தொடர்பு கொண்டு பேசுபவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் அபரதம் விதிக்கப்படும் என்று தண்டோரா போட்டு அறிவித்திருந்தனர்.
இந்நிலையில், தன்னை குடும்பத்துடன் ஊரை விட்டு ஒதுக்கிவைத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி லெட்சுமணனின் குடும்பத்தினர் மயிலாடுதுறை கோட்டாட்சியர் மகாராணியிடம் சில நாட்களுக்கு முன்பு புகார் அளித்திருந்தனர்.
அதனைத் தொடர்ந்து, ஊர்க்கூட்டம் போட்ட கிராமபஞ்சாயத்தார்கள் லெட்சுமணன் குடும்பத்தினரை ஊரைவிட்டு வெளியேற்ற திட்டமிட்டு, குமார் என்பவரது மனைவியை வைத்து லெட்சுமணனை தாக்கி அவமானப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதனால், மனமுடைந்த லெட்சுமணன் தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சித்தார். அவரைக் காப்பாற்றிய குடும்பத்தினர் அவரை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று லெட்சுமணனின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.