தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தோடு சேர்த்து எட்டு மீன்வள அறிவியல் கல்லூரிகளுக்கு இந்த ஆண்டு முதல் புதிதாக சுயநிதி பிரிவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால், அரசு கல்லூரியில் பயிலும் மாணவர்களின் வேலை வாய்ப்பு பறிபோகும் அபாயம் ஏற்பட்டு, மாணவர்கள் வேலை தேடி அலையும் சூழல் உருவாகும் என பலர் கூறுகின்றனர்.
எனவே மீன்வள அறிவியல் கல்லூரிகளில் சுயநிதி பாட பிரிவுக்கு வழங்கியுள்ள அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்றும், இதற்காக போராட்டம் நடத்திய 11 மாணவர்கள் மீதான இடைநீக்க உத்தரவை திரும்ப பெற வலியுறுத்தியும் நாகையில் உள்ள தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வள கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பயிலும் மாணவ, மாணவிகள் 90க்கும் மேற்பட்டோர் இன்று நடைபெற இருந்த பருவத்தேர்வை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், மாணவர்கள் கல்லூரி வாயில் முன்பு அமர்ந்து தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களையும் எழுப்பினர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மாணவர் ஒருவர், ” ஏற்கனவே மீன்வள படிப்பை முடித்த மாணவர்களுக்கே வேலையில்லா நிலைதான் உள்ளது. சுயநிதி பிரிவுக்கு அனுமதி கொடுத்திருப்பதால், தனியார் கல்வி நிறுவனங்கள் புதிதாக மீன்வள படிப்பை தொடங்கலாம். இதனால் மீன்வள படிப்பை பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து, தற்போது பயின்று வரும் மாணவர்களின் வேலைவாய்ப்பை பாதிக்கும். மீன்வள ஆய்வாளராவதற்கு தகுதியாக மீன்வள படிப்பு மட்டும் இருந்தது. ஆனால், தற்போது தமிழ்நாடு அரசு அனைத்து அறிவியல் படிப்புகளையும் தகுதியாக அறிவித்துள்ளது.
இதனாலும் எங்களது வேலைவாய்ப்பு பாதிப்படையும். நிறைய மீன்வள அரசுக் கல்லூரிகள் இருப்பதால் மெரிட்டில் உள்ள மாணவர்கள் மட்டுமே படிப்பார்கள். ஆனால், சுயநிதி பிரிவுக்கு அனுமதித்தால் பணம் இருக்கும் அனைவரும் படிப்பதற்கு இது வழிவகுக்கும். எனவே சுயநிதி பிரிவுக்கான அனுமதியை தமிழ்நாடு அரசு ரத்து செய்ய வேண்டும்” என்றார்.