நாகை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு முன் தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடித்த மீனவர்களுக்கும், சிறுதொழில் செய்யும் பைபர் படகு மீனவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து தடைசெய்யப்பட்ட வலைகளை அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தி, வெள்ளப்பள்ளம், தரங்கம்பாடி உள்ளிட்ட10 கிராம பைபர் படகு மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில் தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்திவரும் மீனவர்கள், மற்ற மாநிலங்களில் சுருக்குமடி வலைக்கு அனுமதி இருப்பதுபோல அனுமதி வழங்க வேண்டுமென கோரி ஆண்கள், பெண்கள் என ஆயிரக்கணக்கானோர் ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்டனர்.
அதனைத் தொடர்ந்து ஆட்சியர் அலுவலகம் முன்பு மீனவர்களையும், பெண்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தியதால் இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து மீனவ கிராம நிர்வாகிகள், தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளைப் பயன்படுத்த அனுமதி வழங்க வேண்டுமென தங்கள் கோரிக்கை மனுவினை மாவட்ட வருவாய் அலுவலரிடம் அளித்துள்ளனர்.
இதையும் படிங்க:தஞ்சாவூரில் முகம் எரிக்கப்பட்ட நிலையில் இளைஞர் கொலை