மயிலாடுதுறை: தரங்கம்பாடி மீன்பிடி துறைமுகத்தில் சாகர்பரிக்கிரமா திட்டத்தின் ஒரு பகுதியாக மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா மற்றும் மத்திய மீன்வளத் துறை இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன் ஆகியோர் மீனவர்களை சந்தித்து கலந்துரையாடினர்.
பின்னர் மீனவர்களிடையே பேசிய அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா கூறுகையில், "சரித்திர புகழ்வாய்ந்த தரங்கம்பாடியில் சாகர் பரிக்கிரமா திட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இணை அமைச்சர் எல்.முருகன் பல்வேறு துறைகளில் பணியாற்றினாலும் கூட மீன்வளத் துறையில் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறார்.
நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்ததற்கு பின்னால் முதன்முறையாக மீன்வளத் துறைக்கு என முதன்முதலாக தனி துறையை பிரதமர் நரேந்திர மோடி ஒதுக்கி வரலாறு படைத்துள்ளார். மீனவர்களுக்காக ஆண்டுக்கு 7 சதவீதம் மட்டுமே வட்டி செலுத்தும் வகையில், ரூ.1.60 லட்சம் கடனுதவி வழங்கும் வகையில் கிசான் பற்று அட்டை என்ற சிறப்பான திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது.
கடனை முறையாக திரும்பச் செலுத்தினால் 3% வாடிக்கையாளருக்கு திரும்ப செலுத்தப்படும். எனவே 4 சதவீத வட்டியில் மட்டுமே கடன் வழங்கப்படுகிறது. இந்த பற்று அட்டை படிப்படியாக அனைத்து மீனவர்களுக்கும் வழங்கி வருகிறோம். விடுபட்டவர்கள் அனைவருக்கும் விரைவில் வழங்கப்படும். அனைத்து மீனவர்களுக்கும் பற்று அட்டை சென்றுசேர வேண்டும் என்பதே மத்திய அரசின் விருப்பம்.
இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவதில் மாவட்ட முன்னோடி வங்கி உற்சாகத்துடன் செயல்பட்டு வருகிறது. மீன்வள மேம்பாட்டு துறையின் சார்பில் முன்னோடி வங்கிகளின் மூலமாக இறால் வளர்ப்பு, அலங்கார மீன் வளர்ப்பு போன்ற திட்டங்களுக்கான கடன் பெற்று வாழ்வில் முன்னேற வேண்டும்” என்றார்.
அதைத்தொடர்ந்து, மீனவ பயனாளிகளுக்கு கிசான் பற்று அட்டைகளை வழங்கினர். இதில் இணை அமைச்சர் எல். முருகன், மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் மீனவர்கள் கலந்து கொண்டனர். பின்னர் தரங்கம்பாடியில் இருந்து மத்திய அமைச்சர்கள் மற்றும் மீன் வளத்துறை அதிகாரிகள் படகு மூலம் பூம்புகார் துறைமுகத்திற்கு புறப்பட்டுச் சென்றனர்.
இதையும் படிங்க: அத்திப்பள்ளி விபத்து; உயிரிழந்த குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்