தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பிரவீன் பி நாயர் உத்தரவிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து, மீன்வளத்துறை இணை இயக்குனர் அமல் சேவியர், துணை காவல் ஆய்வாளர் முருகவேல் தலைமையிலான காவல்துறையினர், நாகை துறைமுகம் பகுதியில் தடை செய்யப்பட்ட வலைகளை பறிமுதல் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, காவல்துறையினரைத் தடுத்து நிறுத்திய கீச்சாங்குப்பம் மீனவப் பெண்களும், மீனவர்களும், வலைகளை பறிமுதல் செய்யவிடமாட்டோம் எனக் கூறினர். அப்போது திடீரென பத்துக்கும் மேற்பட்ட மீனவப் பெண்கள் தலையில் மண்ணெண்ணையை ஊற்றி தற்கொலை மிரட்டல் விடுத்தனர்.
தொடர்ந்து காவல் துறையினருக்கும், மீனவர்களும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. முன்னதாக, நாகப்பட்டினம், வேதாரண்யம் கடல் பகுதியில் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி, மீன்பிடித்த கீச்சாங்குப்பம் மீனவர்களுக்கும், அதனை கேட்ட வெள்ளப்பள்ளம் கிராம மீனவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
நேற்று முன்தினம் நடந்த இம்மோதலால், 17க்கும் மேற்பட்டோர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சூப்பர் மார்க்கெட்டில் செல்போன் திருடிய கடற்படை தள ஊழியர்