நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டத்திற்குள்ள 20 ஆயிரம் மீனவர்கள், சுமார் 150க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில், சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடித்து வந்தனர். இது தடைசெய்யப்பட்ட வலை என்பதால், இதனைப் பயன்படுத்தி கடலில் மீன்பிடிக்க கூடாது என சென்ற ஆண்டு தமிழ்நாடு அரசு தடை ஆணை பிறப்பித்தது.
இந்நிலையில் சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி, மீன்பிடித்து வந்த மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து, சுருக்குமடி வலைகளை பயன்படுத்துவது குறித்த அவசர ஆலோசனை கூட்டம் இன்று (மார்ச் 19) நாகப்பட்டினம் மாவட்டம் நம்பியார் நகரில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலைகளை பயன்படுத்த அனுமதி வழங்காத தமிழ்நாடு அரசைக் கண்டித்து, நம்பியார் நகர் மீனவர்கள், இன்று முதல் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபடுவதென முடிவெடுத்துள்ளனர்.
மேலும் சுருக்கு மடி வலைகளை பயன்படுத்த அரசு அனுமதி அளிக்கவில்லை என்றால், தேர்தல் நெருங்கும் வேளையில் பல கட்ட போராட்டங்களை நடத்தப் போவதாக மீனவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: வாக்கு மையங்களில் கேமரா பொருத்தும் பணி: முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தலைமைத் தேர்தல் அலுவலர் சுற்றறிக்கை