நாகை: மீன்பிடி தடைக்காலம் முடிந்தும், கரோனா பரவல் காரணமாக கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாமல் இருந்த நாகை மாவட்ட மீனவர்கள் 75 நாள்களுக்குப் பிறகு கடந்த 30ஆம் தேதி கடலுக்குச் சென்றனர். வழக்கமாக ஐந்து நாள்கள் கடலில் தங்கி மீன்பிடிக்கும் நிலையில், போதிய மீன்கள் வலையில் சிக்காததால், மூன்று நாள்களிலே மீனவர்கள் தற்போது கரை திரும்பியுள்ளனர்.
இன்று (ஜூலை.03) அதிகாலை நாகை துறைமுகத்திற்கு விசைப்படகு மீனவர்கள் வந்து சேர்ந்த நிலையில், நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சிறு, குறு, மீன் வியாபாரிகள் மீன்களை வாங்கத் திரண்டனர். மீன்களின் வரத்து குறைந்த காரணத்தால் ஊரடங்கிற்கு முன்பு விற்ற விலையைவிட இரு மடங்கு மீன்களின் விலை உயர்ந்துள்ளது.
நாகையின் மீன்களின் இன்றைய விலை
மீன் | ஊரடங்குக்கு முன் | இன்றைய விலை |
வஞ்சரம் | ரூ. 700 | ரூ.1100 |
பாறை | ரூ.250 | ரூ.450 |
கொடுவா | ரூ. 450 | ரூ. 500 |
வெள்ளை வாவல் | ரூ. 800 | ரூ. 1000 |
கருப்பு வாவல் | ரூ. 500 | ரூ.800 |
டீசல் விலை உயர்வாலும் நட்டம்!
டீசல் விலை உயர்வால் கடும் நட்டம் ஏற்பட்டிருப்பதாக புலம்பும் மீனவர்கள், ஒருமுறை ஆழ்கடல் மீன் பிடிப்புக்குச் செல்ல சுமார் ஒரு லட்சம் ரூபாய் வரை டீசலுக்கு செலவு செய்து வந்த நிலையில், தற்போது இரண்டு லட்சம் ரூபாய்வரை டீசலுக்கு மட்டுமே செலவாகிறது என வேதனை தெரிவிக்கின்றனர்.
கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக நாள் ஒன்றுக்கு நாகை துறைமுகத்தில் 50 விசைப்படகு மீனவர்கள் மட்டுமே மீன் விற்பனையில் ஈடுபடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: காசிமேடு சந்தையில் குறைந்த மீன்வரத்து... ஏமாற்றத்துடன் திரும்பிய அசைவப்பிரியர்கள்