மயிலாடுதுறை: சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மீன் மார்க்கெட் இயங்கி வருகிறது. இங்கு நேற்று காந்தி ஜெயந்தி தினத்தில் பல்வேறு பகுதியிலிருந்து மீனவப்பெண்கள், வியாபாரிகள், மீன்களை எடுத்து வந்து விற்பனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது நகராட்சி அலுவலர் மற்றும் ஒப்பந்தத்தொழிலாளர்கள் மீன் மார்க்கெட்டுக்கு திடீர் என வந்து காந்தி ஜெயந்தி அன்று மீன் விற்பனை செய்யக்கூடாது என கூறி விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மீன், இறால், நண்டு ஆகியவற்றைப் பறிமுதல் செய்து சீர்காழி நகராட்சி அலுவலகத்திற்கு எடுத்துச்சென்றனர்.
தொடர்ந்து மீன் வியாபாரிகள் நகராட்சி அலுவலகத்திற்குச்சென்று காந்தி ஜெயந்தி தினத்தில் ஆண்டுதோறும் மீன் விற்பனை நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும் அதேபோல் மீன் விற்பனை நடந்தது எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட மீன்கள் வியாபாரியிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த தாமதத்தினால் மீன் விற்பனை இல்லாமல் நஷ்டம் ஏற்பட்டதாக மீன் மார்க்கெட்டில் மீன் விற்பனையில் ஈடுபட்டு வரும் மீனவப் பெண்கள் மற்றும் மீன் வியாபாரிகள் 10க்கும் மேற்பட்டவர்கள் நகராட்சி அலுவலகத்தின் முன்பு, மீன் கூடைகளை வைத்து நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.
மீன்களைப் பறிமுதல் செய்து திருப்பித் தர தாமதித்ததால் மீன் விற்பனை இல்லாமல் போனதாகவும், கடுமையாக நடந்துகொண்டதாகவும் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறினார். இதனால் நகராட்சி அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: போதிய பேருந்து வசதி இல்லாததால் மாணவர்கள் தொங்கியபடி பேருந்தில் செல்லும் விபரீதம்!