மயிலாடுதுறை: தமிழ்நாட்டில் சம்பா, தாளடி நடவு பணிகள் துவங்கியுள்ளன. தற்போது 80 ஆயிரம் ஏக்கருக்கு மேல் விவசாயிகள் நடவு செய்து வருகின்றனர். காவிரி ஆற்றில் தண்ணீர் இல்லாததால் நிலத்தடி நீரைக் கொண்டும் பம்பு நடவுப் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் பொன்னூர், கட்டளச்சேரி, பாண்டூர் உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீரின் தன்மை மாறி, 250க்கும் மேற்பட்ட ஏக்கர் அளவிலான சம்பா பயிர்கள் கருகி வருகிறது. சம்பா பயிர்கள் நட்டு ஒரு மாதம் ஆகியுள்ள நிலையில், பயிர்கள் 1 அடி அளவிற்கு வளர்ந்து இருக்க வேண்டும்.
ஆனால் காவிரியில் தண்ணீர் வராததாலும், கடந்த 1 மாதத்திற்கு மேலாக மழைப்பொழிவு இல்லாத காரணத்தாலும் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. இதனால் பம்பு செட்டுகளில் தண்ணீர் அளவு குறைந்து உப்புக் கரைசலாக வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், “35 ஏக்கரில் உமா ரகம் சம்பா பயிரை 25 ஏக்கரில் நடவு செய்துள்ளோம். நடவு செய்து ஒரு மாதமான நிலையில் 25 ஏக்கரில் பயிர்கள் வளராமல் தரையோடு தரையாக கருகி உள்ளது. பூச்சிக்கொல்லி மருந்து அடித்து பயிர்களை காப்பாற்ற முயற்சி செய்தும் பயனில்லை.
இதுவரை ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் செலவு செய்துள்ள நிலையில், பயிர்கள் வளராமல் கருகி வருவது வேதனையை ஏற்படுத்தி உள்ளது. உடனடியாக வேளாண்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து பயிர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த காவிரி நீரை அரசு பெற்றுத் தர வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளார்.