இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ”தமிழகத்தில் காவிரி கடைமடை பகுதியாக இருக்கக்கூடிய நாகை மாவட்டத்தில் இந்த ஆண்டு காவிரி நீர், சம்பா சாகுபடிக்கு போதுமான அளவு கிடைத்ததால் மயிலாடுதுறை, தரங்கம்பாடி, சீர்காழி ஆகிய தாலுகா பகுதிகளில் சம்பா சாகுபடி முழுமையாக செய்யபட்டு அறுவடைகள் முடிந்தன. பெரும்பான்மையான விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில்தான் தங்களின் நெல் விற்பனை செய்தனர். மார்ச் மாதம் 20ஆம் தேதி வரை மயிலாடுதுறை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. அறுவடை முழுவதுமாக முடிந்ததால் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நெல் கொள்முதல் இல்லை.
ஆனால் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் சேமிப்பு கிடங்குகள் அவ்வப்போது கொண்டு செயல்படாததால் ஆங்காங்கே தேங்கி கிடக்கிறது. இதனால் கொள்முதல் நிலைய ஊழியர்கள் லாரி வரும் என்று தினந்தோறும் காத்திருந்து செல்வது வழக்கமாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக வறட்சியால் விவசாயம் பொய்த்துப்போன நிலையில் சம்பா சாகுபடி செய்யப்பட்டு அறுவடை செய்த நெல்லை நேரடி கொள்முதல் நிலையங்களில் விற்கப்பட்டது. இருந்தாலும் உணவு தானியம் பாதுகாப்பான சேமிப்பு கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்படாமல் அந்த நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆயிரக்கணக்கான மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
தார் பாய் இருக்கின்ற வரை மூட்டைகள் மூடி வைத்துள்ளனர். மற்ற மூட்டைகள் திறந்த வெளியில் கிடக்கிறது. கால்நடை அதனை சேதப்படுத்துகிறது. நெல்மணிகள் சேதமடைவதை காண்பதே மன வேதனையாக உள்ளது. மேலும் வரும் 30ஆம் தேதி ஃபானி புயல் வருகிறது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. அப்படி புயல், மழை பெய்தால் கொள்முதல் நிலையங்களில் கிடக்கும் நெல் மூட்டைகள் மழையில் முற்றிலுமாக சேதமடைந்துவிடும். ஃபானிப்புயல் பாதிப்பிற்கு முன்பாக மயிலாடுதுறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொள்முதல் நிலையங்களில் தேங்கிக் கிடக்கும் நெல்மூட்டைகளை உணவு தானிய சேமிப்பு கிடங்கு போர்க்கால அடிப்படையில் கொண்டு செல்வதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளனர்
.