சீர்காழியில் இருந்து நாகப்பட்டினம் வரை 4 வழிச்சாலை போடுவதற்கு விளை நிலம், வீடு, கடைகள் என அனைத்தும் இடிக்கப்பட்டுள்ளது.
இதன் உரிமையாளர்களிடம் உரிய அனுமதி பெறாமல் சதுர அடி வெறும் ரூ.6க்கு மத்திய, மாநில அரசுகள் காவல்துறை துணையுடன் கையகப்படுத்தி வருகிறது. இதற்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இதற்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டாட்சியர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய தொகை வழங்கிய பின்னர் நிலம் அளிக்கும் பணி செய்யப்படும் என அமைதி பேச்சுவார்த்தையில் உறுதி அளித்தனர்.
ஆனால், திடீரென சீர்காழி அருகே நடராஜபிள்ளைசாவடி கிராமத்தில் நிலம் அளிக்கும் பணியில் அலுவலர்கள் இன்று ஈடுபட்டனர். இந்த பணியை விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வட்டாட்சியர் சித்ராவிடம் விவசாயிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போராட்டம் தொடர்ந்ததால் காவல்துறை 10க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர். பின்னர் நிலம் அளிக்கும் பணியை வட்டாட்சியர் காவல்துறை பாதுகாப்புடன் செய்து வருகிறது.