டெல்டா மாவட்ட விவசாயிகள் மேட்டூர் அணையிலிருந்து காவிரி நீர் திறந்துவிடப்பட்டதைத் தொடர்ந்து உழவுப் பணிகளை மேற்கொண்டு தண்ணீருக்காக காத்திருக்கின்றனர். இந்தச் சூழலில் வாய்க்கால்கள், ஆறுகள் முறையாக தூர்வாரப்படாத காரணத்தால் காவிரி நீர் கடைமடைப் பகுதியான நாகை மாவட்டத்திற்கு வந்து சேர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டியை அடுத்த திருமணங்குடி கிராமத்தில் அமைந்துள்ள குப்பையன் வாய்க்கால் தடுப்பணை கட்டுமான பணிகளில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி தடுப்பணை மேல் நின்று விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கென ரூ.7 லட்சம் நிதி ஒதுக்கியும் பணிகளை தொடங்காத பொதுப்பணித் துறை அலுவலர்களைக் கண்டித்தும் விவசாயிகள் கண்டன முழக்கங்களை எழுப்பினர். மேலும், காவிரி நீர் திறந்துவிடப்பட்ட நிலையில் தடுப்பணை சரி செய்யப்படாத காரணத்தால் மேட்டூர் அணையிலிருந்து திறந்துவிடப்படும் காவிரி நீர் வீணாகக் கடலில் கலக்கும் நிலை ஏற்படும் எனவும், இதனால் திருமணங்குடி, மீனம்ப நல்லூர், கருங்கன்னி, கீழையூர் உள்ளிட்ட 10 கிராம விவசாயிகள் சாகுபடி செய்யமுடியாத நிலை ஏற்படும் என்றும் விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
எனவே, 20 ஆயிரம் ஹெக்டேர் பாசனம் பெறும் குப்பையன் வாய்க்காலை தூர்வாரி, தடுப்பணை கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் எனவும், இல்லையென்றால் பொதுப் பணித் துறை அலுவலர்களைக் கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் விவசாயிகள் எச்சரித்தனர்.