நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை, சீர்காழி அருகே ’மாதானம் திட்டம்' என்ற பெயரில் 20க்கும் மேற்பட்ட ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டு எரிவாயு, கச்சா எண்ணெய் எடுக்கப்பட்டு வருகிறது. இங்கு எடுக்கப்படும் திரவக நிலையிலான எரிவாயுவை வர்த்தக நிறுவனங்களுக்குக் கொண்டு செல்ல, சீர்காழியை அடுத்துள்ள வேட்டங்குடி, எடமணல், திருநகரி, மேமாத்தூர் வரையான சுமார் 32 கிலோமீட்டர் தொலைவுக்கு விளைநிலங்கள் வழியாக எரிவாயுக் குழாய் அமைப்பதற்கான பணிகளை கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு கெய்ல் நிறுவனம் தொடங்கியது.
இதற்காக 1.5 மீட்டர் ஆழத்திற்கு பூமிக்குள் குழாய்கள் புதைக்கப்பட்டன. இத்திட்டத்திற்கு திமுக மற்றும் தோழமைக் கட்சிகள், விவசாயிகள், மீனவர்கள், சூழலியல் ஆர்வலர்கள், பொது மக்கள் எனப் பலதரப்பட்ட மக்களும் தங்களது கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்தனர். பல்வேறு இடங்களில் பொது மக்கள் ஒன்றுகூடி குழாய் பதிக்கும் பணிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராடினர்.
இதனால், பொதுமக்களின் கருத்துகளைக் கேட்ட பிறகு குழாய்கள் பதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் முதலமைச்சர் பழனிசாமி கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு தஞ்சை,திருவாரூர் ,நாகை, கடலூர் உள்ளிட்ட பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தார்.
அதனைத் தொடர்ந்து இப்பகுதிகளில் விவசாயப் பணிகளை பாதிக்கும் திட்டங்கள், தொழிற்சாலைகள் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்படாது எனவும் அறிவித்திருந்தார். இந்நிலையில் விவசாயிகளின் தொடர் போராட்டங்களினால் நிறுத்தி வைக்கப்பட்ட கெய்ல் குழாய் புதைக்கும் பணி இந்தக் கரோனா ஊரடங்கு காலத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சீர்காழி அருகேயுள்ள திருநகரியிலிருந்து வழுதலைக்குடி, வெள்ளக்குளம், கேவரோடை வழியாக பழையபாளையம் முதன்மை எரிவாயு சேகரிப்பு மையம்வரை குழாய் புதைக்கும் பணியும் தீவிரமாக இரவோடு இரவாக நடந்து வருகிறது.
![எரிவாயு குழாய் பதிப்பதைக் கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/02:40:57:1597137057_tn-ngp-03a-gail-pipe-puthaippu-script-tn10023-hdmp4_11082020141601_1108f_1597135561_818.jpg)
கெய்ல் எரிவாயு குழாய் புதைக்கும் பணியால் விவசாயிகளின் விளைநிலங்கள் மிகவும் பாதிக்கப்படும், விவசாயிகளின் வாழ்வாதரங்கள் பாதிக்கப்பட்டு விவசாயிகள் நிர்க்கதியாக நிற்கும் சூழ்நிலை ஏற்படும், எனவே பொது மக்களின் கருத்துகள் கேட்காமல் இத்திட்டங்களை செயல்படுத்தக் கூடாது என தற்போது பல்வேறு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், ”இது போன்ற பெரும் திட்டங்களை செயலாக்கும்போது அந்தந்தப் பகுதி மக்களின் கருத்துக்களை கேட்பது அவசியம் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருப்பதை மத்திய, மாநில அரசுகள் கவனிக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்த பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலப் பகுதிகளில் மீண்டும் கெய்ல் நிறுவனத்தின் எண்ணெய் குழாய் பதிக்கும் பணியில் நடைபெற்று வருவது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், வளர்ச்சி என்ற பெயரில் புதுப்புது பேரழிவுத் திட்டங்களை கொண்டுவந்து, அதற்காக காலம் காலமாக பயன்பாட்டிலுள்ள விவசாய நிலங்களை அழிப்பது ஏற்புடையதல்ல. நாட்டின் வளர்ச்சி என்ற பெயரில் பெரும் முதலாளிகளுக்காக பாடுபட்டுவரும் மத்திய அரசு, தமிழ்நாடு விவசாயிகளின் வயிற்றில் அடிப்பது வேதனையளிக்கிறது. ஏற்கனவே, வறட்சி, மழை, வெள்ளம், கடன்சுமை போன்ற பிரச்னைகளில் சிக்கித் தவிக்கும் விவசாயிகளின் நிலையில் பேரிடர் திட்டங்களினால் விவசாய வாழ்வாதாரம் பாழாகிவிடும். குடிநீர் தட்டுப்பாடு போன்ற பிரச்னைகளும் ஏற்படும்.
எனவே, கெய்ல் குழாய் இந்தப் பணிகளை உடனடியாக நிறுத்திட வேண்டும்” எனவும் அச்சம் தெரிவித்துள்ளனர். மேலும், டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக முதலமைச்சர் அறிவித்தது என்னவாயிற்று எனவும், மத்திய, மாநில அரசுகள் இதனை முற்றிலுமாகத் தடை செய்ய வேண்டுமெனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.