மயிலாடுதுறை: திருவிழந்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சௌந்தரராஜன்(45). கடந்த 4ஆம் தேதி அன்று மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் கரோனா தொற்று அறிகுறியுடன் சென்றதால், மருத்துவர்கள் அவரை கரோனா வார்டில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அப்போது அவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கரோனா தொற்று பாதிப்பு இல்லை என முடிவுகள் வந்துள்ளன.
இந்நிலையில் இன்று அதிகாலை (ஜுன் 12) அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், அவரை சாதாரணப் படுக்கையிலிருந்து ஆக்ஸிஜன் படுக்கைக்கு மாற்றுவதற்காக ஊழியர்கள் சக்கர வாகனத்தில் வைத்து அழைத்து வந்துள்ளனர். அப்போது அவருக்கு மூச்சுத்திணறல் அதிகமாகி, ஆக்ஸிஜன் படுக்கைக்கு கொண்டுசெல்லும் முன்பாகவே உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
தொற்று பாதிப்பு இல்லாத காரணத்தால், அவரது உடலை வீட்டுக்கு எடுத்துச் செல்ல ஒப்படைக்க வேண்டும் என்று உறவினர்கள் கேட்டுள்ளனர். ஆனால், அவரது உடலை சுகாதார முறைப்படி எரியூட்ட வேண்டும் என்று சுகாதாரத்துறையினர் கூறியதால், அவரது உடலை சவக்கிடங்கில் ஊழியர்கள் கொண்டு சென்றுள்ளனர். அப்போது வழிமறித்த உறவினர்கள் தொற்று பாதிப்பு இல்லாதவரின் உடலை, வீட்டுக்கு எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று மருத்துவமனை ஊழியர்களிடம் பிரச்னையில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் பாலசுப்பிரமணியம் தலைமையிலான காவல் துறையினர் சம்பந்தப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதற்கு உடன்படாத உறவினர்கள் இறந்தவரின் உடலை காவல் துறையினரின் பாதுகாப்பையும் மீறி, ஆட்டோவில் ஏற்றி வீட்டுக்கு கொண்டு சென்றனர். இதனால் மருத்துவமனை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரது உடலை சுகாதார முறைப்படி அடக்கம் செய்ய அறிவுறுத்தப்பட்டது.
இதையும் படிங்க: பாஜகவிலிருந்து இன்னும் ஏராளமானோர் வரவுள்ளனர் - மம்தா நம்பிக்கை