மயிலாடுதுறை: நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று (நவ.12) அனைவராலும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இரவு முதல் பட்டாசு வெடித்தும், காலையில் எண்ணெய் தேய்த்துக் குளித்து, புத்தாடை அணிந்து, இனிப்புகளை உண்டும், பிறருக்கு வழங்கியும் மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், மயிலாடுதுறை மாயூரநாதர் கோயில் தெற்கு வீதியில் வசித்து வருகிறார், கமலாம்பாள். இந்தப் பகுதியில் பல தலைமுறையாக வசித்து வரும் இவருக்கு, 2 மகள் மற்றும் 4 மகன்கள் உள்ள நிலையில், அனைவரும் திருமணம் முடித்து மயிலாடுதுறை மற்றும் பிற மாவட்டங்களில் வசித்து வருகின்றனர். என்னதான் வெவ்வேறு ஊர்களில் வசித்து வந்தாலும், இந்தக் குடும்பத்தினர் தீபாவளி பண்டிகையன்று குடும்பத்தோடு இணைந்து, மயிலாடுதுறையில் உள்ள அவர்களின் பூர்விக வீட்டில் ஒன்று கூடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்வாறு மயிலாடுதுறை இல்லத்தில் வருடந்தோறும் தீபாவளி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இதையடுத்து, 42-வது ஆண்டாக குடும்பம் முழுவதும் ஒன்று கூடி தீபாவளி பண்டிகையைக் கொண்டாடுவதற்கு பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்தனர்.
பிற ஊர்களில் வசிக்கும் கமலாம்பாளின் மகன்கள், மகள்கள், அவர்களது குழந்தைகள் மற்றும் குடும்பத்தினர் என அனைவரும் ஒன்று கூடி அவர்களின் சொந்த ஊரான மயிலாடுதுறைக்குச் சென்று அதிகாலையிலே எழுந்து, எண்ணெய் தேய்த்து குளித்து, புத்தாடைகள் அணிந்து, இனிப்பு வகைகள், பழங்கள், பலகாரங்கள் வைத்து சாமிக்கு படையல் இட்டு, குதூகலமாக பட்டாசு வெடித்து, ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்து மகிழ்ச்சியுடன் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடினர்.
கமலாம்பாளின் பேரன் பிரேம்குமார்-சுவேதா தம்பதியினருக்கு தலைதீபாவளி என்பதால், கூடுதல் உற்சாகத்துடன் பண்டிகையைக் கொண்டாடி கமலாம்பாளிடம் ஆசி பெற்று இனிப்புகள் உண்டு மகிழ்ந்தனர். கொண்டாட்டத்திற்குப் பின்னர் அனைவரும் சேர்ந்து நின்றபடி, குடும்ப புகைப்படம் எடுத்துக் கொண்டு உற்சாகமாக அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: தீபாவளியை ஆதரவற்ற முதியோர்களுடன் கொண்டாடிய மாநகராட்சி மேயர்.. தஞ்சையில் நெகிழ்ச்சி!