மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே சோழம்பேட்டையில் மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணையும் விழா நேற்று (பிப்ரவரி 2) நடைபெற்றது. அதிமுக மயிலாடுதுறை தெற்கு ஒன்றியம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்டச் செயலாளர் பவுன்ராஜ் தலைமை வகித்தார்.
இதில், கைத்தறி மற்றும் துணிநூல் துறை முன்னாள் அமைச்சரும், வேதாரண்யம் சட்டப்பேரவை உறுப்பினருமான ஓ.எஸ். மணியன் பங்கேற்று சிறப்புரையாற்றி, 300-க்கும் மேற்பட்ட மாற்றுக்கட்சியினருக்கு சேலை, துண்டு வழங்கி அதிமுகவில் இணைத்துக் கொண்டார்.
ஓட்டுக் கேட்கத் தெரியவில்லையே
அப்போது அவர் பேசியதாவது, "மு.க. ஸ்டாலினுக்கு உள்ளாட்சித் தேர்தலில் எதைச் சொல்லி ஓட்டு கேட்பது என்றே தெரியவில்லை. அனைத்தையுமே சட்டப்பேரவைத் தேர்தலிலேயே சொல்லிவிட்டதால் தற்போது எதைச் சொல்லி ஓட்டு கேட்பது என்று விழிக்கிறார்.
அதிமுகவில் வேட்பாளர்கள் அனைவரும் அறிவிக்கப்பட்டுவிட்டனர். ஆனால், திமுகவில் இதுவரை வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படாமல் அடிதடிப் பிரச்சினையாக உள்ளது. திமுகவில் ஒரே குடும்பத்தில் பலருக்கு சீட்டு வழங்கப்படுகிறது. திமுகவில் அறிவிக்கப்பட்ட சிறப்பான திட்டம் 'மொட்டைக்கு இல்லை கட்டணம்' என்ற திட்டம் மட்டுமே.
கடைக்குச் சென்று மொட்டை அடித்தால் காசு தர வேண்டும். ஆனால், கோயிலுக்குச் சென்று மொட்டை அடித்தால் கட்டணம் தர வேண்டாம் என்பதுதான் திமுகவின் சிறப்பான திட்டம்" என்றார். இக்கூட்டத்தில், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: 'ஏழை, பணக்காரர்களுக்கு தனித்தனி இந்தியா'; மோடி அரசை வெளுத்து வாங்கிய ராகுல்!