தமிழ்நாடு அரசின் சிறப்பு வேளாண் மண்டல பாதுகாப்பு சட்டம் 2020ஐ மீறி, சட்டத்துக்கு புறம்பாக செயல்படும் ஓஎன்ஜிசி மற்றும் உரிமம் இல்லாமல் குழாய் பதிக்கும் கெயில் நிறுவன ஒப்பந்ததாரர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, தமிழக நிலம், நீர் பாதுகாப்பு இயக்க அமைப்பாளரும், அரசியலமைப்பு சட்ட பாதுகாப்பு கூட்டியக்கம் உறுப்பினருமான இரணியன் மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் மகாராணியிடம் புகார் மனு அளித்துள்ளார்.
அந்த மனுவில், தமிழ்நாடு அரசு சிறப்பு வேளாண் மண்டல பாதுகாப்பு சட்டத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றி, அரசிதழிலும் வெளியிட்டுள்ளது. அதன்படி, டெல்டா மாவட்டங்களில் புதிதாக எண்ணெய் எரிவாயு திட்டங்களையும், அதற்கான பணிகளையும் தடைசெய்துள்ளது. ஆனால், ஓஎன்ஜிசி நிறுவனமும், கெயில் இந்தியா நிறுவனமும் சுமார் 25 கிலோமீட்டர் தூரத்துக்கு புதிதாக குழாய் பதிக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இதுவரையில் டெல்டா மாவட்டங்களில் நடைமுறையிலுள்ள ஹைட்ரோகார்பன் எண்ணெய் எரிவாயு குழாய் கிணறுகளை கெயில் இந்தியா நிறுவனமும் அதன் ஒப்பந்த நிறுவனமும் நடத்தி வருகிறது. தஞ்சாவூரில் 29, திருவாரூரில் 29, நாகப்பட்டினத்தில் 57 ஆகியவை தமிழ்நாடு சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாட்டு வாரிய உரிமம் இல்லாமல் இயங்குகின்றன. மேற்சொன்ன நிறுவனங்கள் மோசடியாக சட்ட விதி மீறலில் ஈடுபட்டு வருகின்றன.
எனவே, தமிழ்நாடு சிறப்பு வேளாண் மண்டல பாதுகாப்பு சட்டம் 2020, தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய விதிமுறைகளை மீறி செயல்படும் இரு நிறுவனங்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். வேளாண் மண்டலத்தை பாதுகாக்க வேண்டும், எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, எஸ்டிபிஐ, தமிழ் தேசிய முன்னணி, இந்திய தேசிய லீக், உள்ளிட்ட பல்வேறு கட்சி அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகத் தீர்மானம்? - முதலமைச்சரிடம் இஸ்லாமியர்கள் மனு