ரயில்வே இருப்புப்பாதைகளை மின்மயமாக்கும் திட்டத்தின் கீழ், விழுப்புரம் முதல் திருவாரூர் வரையிலான அகலரயில்பாதையை மின்மயமாக்கும் பணி நடைபெற்று வருகின்றது. இதில் விழுப்புரம் முதல் கடலூர் வரையிலான பணிகள் நிறைவடைந்த நிலையில், கடலூர் முதல் திருவாரூர் வரை 114 கி.மீ தூரத்திற்கு 260 கோடி ரூபாய் மதிப்பில், இருப்புப்பாதைகள் மின்மயமாக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை வழியே மின் இன்ஜின் சோதனை ஓட்டம் நடைபெற்றது. இந்த மின்சார இன்ஜின் மயிலாடுதுறைக்கு நேற்று மாலை வந்து சேர்ந்தது. ரயில்வே தலைமை பொதுமேலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த சோதனை ஓட்டத்தை பொதுமக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து சென்றனர்.
மேலும் பிப்ரவரி 4 மற்றும் 5ஆம் தேதிகளில் ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம் ரயில்வே பாதுகாப்பு முதன்மை ஆணையர் தலைமையில் நடைபெறும் என்றும், பின்னர் மின்சார இன்ஜின்கள் மூலம் சரக்கு ரயில்களும் அதனைத் தொடர்ந்து பயணிகளின் ரயில்களும் இயக்கப்படும் என்று ரயில்வே அலுவலர்கள் தெரிவித்தனர்.
அதனையடுத்து, ஆறுமாத காலத்திற்குள், மயிலாடுதுறை தஞ்சாவூர் இடையே மின்மயமாக்கும் பணிகள் நிறைவு செய்ய ரயில்வே விகாஸ் நிகாம் லிமிடெட் திட்டமிட்டுள்ளதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க:
விரைவில் சிஏஏவிற்கு எதிராக தெலங்கானா சட்டப்பேரவையில் தீர்மானம்