தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தலில் இரண்டு கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதன்படி நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் ஒன்றியத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. பொதுமக்கள் வாக்களிப்பதற்கு 114 வாக்குச்சாவடி மையங்களில் 269 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
57 ஊராட்சிகளை உள்ளடக்கிய செம்பனார்கோவில் ஒன்றியத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு 161 பேரும், மாவட்ட ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவிக்கு 11 பேரும், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவிக்கு 67 பேரும், கிராம வார்டு உறுப்பினர் பதவிக்கு 1,150 பேரும் போட்டியிடுகின்றனர்.
இங்கு 87 ஆயிரத்து 355 ஆண் வாக்காளர்களும் 90 ஆயிரத்து 86 பெண் வாக்காளர்களும் வாக்களிக்கவுள்ளனர். 11 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. எனவே அங்கு 500க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்குப்பதிவு அமைதியாக தொடங்கி நடைபெற்றுவருகிறது. மேலும், பூம்புகார் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ். பவுன்ராஜ் எடுத்துகட்டு சாத்தனூர் ஊராட்சி வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார். அதேபோல் ஏராளமான பொதுமக்கள் வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்குகளைப் பதிவுசெய்து தங்களின் ஜனநாயக கடமையை நிறைவேற்றிவருகின்றனர்.
இதேபோன்று, நாகை, அக்கரைப்பேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலுள்ள வாக்குசாவடியில் ஆர்வத்துடன் வாக்காளர்கள் வாக்களித்துவருகின்றனர்.
வாக்களிக்க வந்த வயதான வாக்காளர்கள் தங்களுக்கு வாக்குச்சீட்டில் வாக்களிப்பது மன நிறைவு தருவதாகவும் மின்னணு இயந்திரத்தில் பதிவு செய்வது வாக்களித்த நிறைவை அளிக்கவில்லை என்றும் தங்கள் விருப்பத்தை தெரிவித்தனர்.
அதேபோல் முதல் முறையாக வாக்குச்சீட்டில் வாக்களித்த இளைஞர் ஒருவர் கூறுகையில், வாக்காளர் அடையாள அட்டை பெற்று ஆறு ஆண்டுகள் சென்றுவிட்ட நிலையில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாததால் வாக்குச்சீட்டில் வாக்களிக்கும் சூழல் ஏற்படவில்லை என்றும் தற்போது முதல்முறையாக வாக்குச்சீட்டில் வாக்களிப்பது தங்களுக்கு புதிய அனுபவமாக இருந்ததாகவும் கருத்து தெரிவித்தனர்.
இதையும் படிங்க:
‘மக்கள் மாற்றத்தை விரும்பிவிட்டார்கள்... திமுக கூட்டணிக்குதான் வெற்றி’