நாகை மாவட்டம் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட பூம்புகார் சட்டசபைத் தொகுதியில் தேர்தல் பணிக்காக காத்திருப்பு பட்டியலில் குறிப்பிட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை தேர்வு செய்து வைத்திருந்தனர்.
இவர்கள், தேர்தல் பணியாற்றும் அலுவலர்கள் யாராவது திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டு பணிக்கு வராமல் போய்விட்டால் அதனை சமாளிப்பதற்காக மாற்று ஏற்பாடுகாக இவர்களை தேர்வுசெய்து வைத்திருந்தனர். இவர்களுக்கு பணிகள் இல்லை என்றால் வீட்டிற்கு அனுப்பி விடுவது வழக்கம்.
இந்நிலையில் செம்பனார்கோவில் மையத்தில் தங்கி இருந்த ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் அனைவரிடமும் கையெழுத்து வாங்கி இருந்தனர். ஆனால் அவர்களுக்கு அடிப்படை வசதி மற்றும் குடிநீர் உணவு போன்றவற்றை செய்து கொடுக்கவில்லை.
மேலும் இவர்களுக்கு பணி ஏதும் இல்லாதால் வீட்டிற்கு திரும்பி செல்வதற்கான செலவினத் தொகை எதுவும் வழங்காமல் அனுப்பினர். இதனால் ஆத்திரமடைந்த அரசு ஊழியர்கள் அந்த மையத்தின் உள்ளே காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து தேர்தல் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். பின் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் போராட்டத்தை கைவிட்டனர்.