நாகை மாவட்டம் சீர்காழியில் ஒருங்கினைந்த நீதிமன்ற வளாகத்தில் தொடுதிரை கணினி வசதியை நாகை மாவட்ட அமர்வு நீதிபதி பத்நாபன் தொடங்கி வைத்தார்.
பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், சீர்காழி நீதிமன்றத்தில் ஜனவரி 1 முதல் சென்ட்ரலைஸ்டு பைஃல் சென்டர் (வழக்குகள் தாக்கல் செய்யப்படும் மையம்) ஆரம்பிக்க உள்ளது. இந்த வசதியுடன் சேர்த்து தற்பொழுது கூடுதல் வசதியாக தொடுதிரை கணினி வசதியும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த தொடுதிரை கணினி வசதி மூலமாக மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள், முடிந்துபோன வழக்குகள் தொடர்பான விபரங்களை வழக்கு எண், குற்ற எண், தரப்பினர்களின் பெயர் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தி பொதுமக்களும் வழக்காடிகளும் அறிந்துகொள்ளலாம். இந்த தொடுதிரையில் தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டு மொழிகளிலும் உள்ளது. அவரவர் விருப்பப்பட்ட மொழிகளில் வழக்கின் விபரங்களை தெரிந்துகொள்ளலாம். இதற்காக தனிப்பட்ட முறையில் கட்டணங்கள் ஏதும் செலுத்த தேவையில்லை.
இ கோர்ட் ஆப்பினை செல்போனில் பதிவிறக்கம் செய்துகொண்டால் இந்தியாவின் எந்த ஊர் நீதிமன்றத்திலும் நடக்கும் விபரத்தினையும் பார்க்கமுடியும். நீதிமன்றத்தில் வாயிதா போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் அன்றைய தினம் மாலைக்குள் பதிவேற்றம் செய்யப்படும் அதன்மூலம் பொதுமக்கள் தெரிந்துகொள்ளமுடியும் என்றார்.