நாகை மாவட்டம், மயிலாடுதுறையை அடுத்த குத்தாலத்தில் அரசு பொது மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு நாள்தோறும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான மக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இந்த மருத்துவமனையில் உள்நோயாளியாக பலரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், குடிநீர் உள்ளிட்ட மருத்துவமனையின் தேவைக்கான நிலத்தடி நீரை, மின்மோட்டார் மூலம் தண்ணீர் தொட்டியில் நிரப்புவது வழக்கம். அவ்வாறு நிரப்பப்படும் தண்ணீரானது தினந்தோறும் தண்ணீர் தொட்டியில் நிரம்பியும் மின்மோட்டாரை நிறுத்தாமல் ஊழியர்கள் அலட்சியம் காட்டுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். அதன் காரணமாக தினந்தோறும் ஏராளமான தண்ணீர் வீணாக போகிறது என மருத்துவமனைக்கு வரும் பொதுமக்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.
மேலும் தங்கள் பகுதியில் தண்ணீரின்றி நாங்கள் அவதிப்படுவது எங்களுக்குதான் தெரியும் என்றும், தண்ணீரின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதனை வீணாக்காமல் அதிகாரிகள் பாதுகாக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.