தமிழ்நாட்டின் 38ஆவது மாவட்டமாக மயிலாடுதுறையை அரசு அறிவித்து அரசாணை வெளியிட்டது. மயிலாடுதுறை மாவட்டத்திற்கான மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் கட்டுவதற்காக முளப்பாக்கம் கிராமத்தில் தேர்வு செய்யப்பட்ட தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான இடத்தை கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "உலகிலேயே கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், உயிரிழந்தவர்களின் விழுக்காடு தமிழ்நாட்டில்தான் குறைவாக உள்ளது. அதேபோல் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
இது தெரியாமல் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அதிமுக அரசு மீது விமர்சித்து வருகிறார். அவர் பள்ளிக்கூடத்துக்கு சென்றாரா இல்லையா? 1, 2 கூட்டல் கழித்தல் வாய்ப்பாடு தெரியுமா? தெரியாதா? குறை சொல்வதுதான் எதிர்க்கட்சிகளின் வேலை. ஆனால் உண்மையை மறைக்க முடியாது.
முதலமைச்சர் மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவித்து அதற்கான அரசாணையை பிறப்பித்து உள்ளார். அதற்காக பப்ளிக் ஹயரிங் நடத்தும் அலுவலராக ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். கரோனா பணி காரணமாக மயிலாடுதுறையில் அலுவலகங்கள் அமைப்பதில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
மயிலாடுதுறையில் ரிங் ரோடு அமைப்பதற்காக நில ஆர்ஜிதம் செய்யும் பணிகள் விரைவில் தொடங்கும். குடிமராமத்து பணிகள், தூர்வாரும் பணிகள் ஆகியன போர்க்கால அடிப்படையில் மூத்த ஐஏஎஸ் அலுவலர்கள் தலைமையில் துரிதமாக நடைபெற்று வருகிறது" இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சென்னையில் 254ஆக குறைந்த கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள்