நாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து பிரித்து மயிலாடுதுறையைத் தலைமையிடமாகக் கொண்டு 38ஆவது புதிய மாவட்டம் உருவாக்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதனைத் தொடர்ந்து அரசாணையும் வெளியிடப்பட்டது. இந்நிலையில், புதிய மாவட்டமான மயிலாடுதுறைக்கு எல்லை வரையறை செய்வதற்கான சிறப்பு அலுவலராக லலிதா ஐஏஎஸ், மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக ஸ்ரீநாதா ஐபிஎஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
மாவட்ட எல்லை வரையறையின் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக பொதுமக்களிடம் கருத்து கேட்கும் கூட்டம் வரும் ஜூலை 30ஆம் தேதி நண்பகல் 12 மணி முதல் 1:30 வரை நாகையில் உள்ள இஜிஎஸ் பிள்ளை தனியார் பொறியியல் கல்லூரியிலும், அதனைத் தொடர்ந்து பிற்பகல் 3:30 மணி முதல் 5:30 வரை மயிலாடுதுறை ஏவிசி கலைக் கல்லூரியிலும் நடைபெறவுள்ளது.
இந்தக் கருத்து கேட்புக் கூட்டத்தில் பொதுமக்கள், பொதுநல அமைப்புகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் ஆகியோர் கலந்துகொண்டு தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம். மேலும் கரோனா தொற்று காரணமாக மாவட்டம் பிரிப்பது தொடர்பான கருத்துகளை, கருத்து கேட்புக் கூட்டம் வாயிலில் வைக்கப்பட்டுள்ள பெட்டியிலும் சமர்ப்பிக்கலாம் எனவும் நாகை மாவட்ட ஆட்சியர் பிரவீன் பி நாயர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கடன் தொல்லை: இரண்டு குழந்தைகளின் தாய் தூக்கிட்டு தற்கொலை