மயிலாடுதுறை: கோழிகுத்தி கிராமத்தில் உள்ள எம்ஜிஆர் நகரில் வசிக்கும் இளம்பருதி என்பவரின் வீட்டு திருமண நிகழ்ச்சி அப்பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றுள்ளது. திருமண விழாவிற்காக அதே பகுதியைச் சேர்ந்த விக்னேஷ்(24), பிரவீன்(22), அஜய்(20) ஆகிய மூவரும் திருமண பேனர் வைத்திருந்தனர். கோழிகுத்தி மெயின் ரோட்டில் உள்ள மகிமைராஜ் என்பவர் வீட்டின் அருகிலும் திருமண பேனர் வைக்கப்பட்டிருந்தது.
இந்தப் பேனரை அகற்றும்படி மகிமைராஜ் கூறியும் அகற்றாததால் பேனரை மகிமைராஜ், அவரது மனைவி கிளாரியா கிழித்து சேதப்படுத்தியதாக விக்னேஷ், பிரவீன், அஜய், அம்பிகா, கவிதா ஆகியோர் சென்று கேட்ட போது இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் ஆத்திரமடைந்த மகிமைராஜ் மனைவி கிளாரியா ஸ்டிக்கர் வெட்டும் கத்தியால் 5 பேரையும் சரமாரியாக கிழித்ததாக கூறப்படுகிறது.
இதில் படுகாயம் அடைந்த ஐந்து பேரும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த மோதலில் காயம் அடைந்து மருத்துவமனைக்கு வந்த மகிமைராஜை பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தாக்கினர். இதனால் மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மயிலாடுதுறை போலீசார் மகிமைராஜை மீட்டுப் பாதுகாப்பாக மருத்துவ சிகிச்சைக்கு அனுமதித்தனர். தொடர்ந்து கத்தியால் கிழிக்கப்பட்டு படுகாயம் அடைந்த விக்னேஷ், பிரவீன், அஜய் ஆகிய மூவரையும் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த மோதல் சம்பவம் குறித்து மயிலாடுதுறை, குத்தாலம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் மகிமைராஜின் மனைவி கிளாரியா சிகிச்சைக்காக சீர்காழி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: பூம்புகார் சுற்றுலா தளத்தின் மேம்பாட்டுப் பணி: அடிக்கல் நாட்டிய அமைச்சர் மெய்யநாதன்