நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா அனந்தமங்கலம் கிராமத்தில் ராஜகோபாலசாமி கோயில் உள்ளது. இக்கோயிலின் மகா மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த ராமர், லட்சுமணர், சீதை, அனுமன் ஆகிய நான்கு சிலைகளை 1978ஆம் ஆண்டு நவ.23ஆம் தேதி அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றனர். இது குறித்து கோயில் நிர்வாக அலுவலர் செல்வராஜ் பொறையார் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
இதனைத்தொடர்ந்து இவ்வழக்கு 1988ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இவ்வழக்கு தொடர்பாக அதே ஆண்டில் நாச்சியார் கோயிலைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, கலியன், ராஜேந்திரன் ஆகிய மூன்று பேரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.
இந்நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த விஜயகுமார் சிங்கப்பூரில் வசித்துவரும் நிலையில், சிலைகள் மீட்புப் பணிக்குழு என்ற அமைப்பை நடத்திவருகிறார். இந்த அமைப்பின் மூலம் தமிழ்நாட்டில் திருடப்பட்ட சிலைகளை மீட்க காவல் துறைக்கு உதவி செய்துவருகிறார்.
அந்த வகையில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள டீலர் ஒருவர் விற்பனைக்கு இருப்பதாக இணையதளத்தில் சிலைகளின் புகைப்படத்தை வெளியிட்டார். அதில், தமிழ்நாட்டு கோயில்களில் திருடப்பட்ட சிலைகள் இருப்பதை விஜயகுமார் கண்டறிந்தார். இது குறித்த புகைப்படங்களை ஆய்வு செய்து தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறைக்கு அனுப்பினர்.
அந்தப் படங்களில் இருப்பது மயிலாடுதுறை அனந்தமங்கலம் கோயிலில் இருந்து 1978ஆம் ஆண்டு திருடப்பட்ட ராமர், லட்சுமணர், சீதா ஐம்பொன் சிலைகள் என்பதை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறை உறுதி செய்து, அதற்கான ஆதாரங்களை பிரிட்டன் அரசுக்கும் அனுப்பினர். தகவலறிந்த டீலர் அந்த மூன்று சிலைகளையும் லண்டன் அலுவலர்களிடம் ஒப்படைத்தார்.
இதனையடுத்து, லண்டன் காவல் துறையினர் சிலைகளை இந்திய தூதரக அலுவலர்களிடம் ஒப்படைத்தனர். லண்டனிலிருந்து வரவழைக்கப்பட்ட இந்தச் சிலைகள் இன்று டெல்லியில் ஒப்படைக்கப்பட்டது.
இதையும் படிங்க: வார்த்தைகளை கவனமாக கையாள வேண்டும் - ஸ்டாலினுக்கு விஜயபாஸ்கர் எச்சரிக்கை