நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி அருகே உள்ள ஆலஞ்சேரி கிராமத்தில் ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மின்சார பற்றாக்குறை, தண்ணீர் பிரச்னை, ஆட்கள் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு இடையே கடன்களை பெற்று குறுவை நெல் சாகுபடியை விவசாயிகள் செய்துள்ளனர். இந்நிலையில், தற்போது அறுவடை செய்யப்பட்டு வரும் அறுவடை நெல்லை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
இதனால் விவசாயிகளை சொந்த செலவில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு அனுப்ப கொட்டாய் அமைத்து நெல் மூட்டைகளை குவியல் குவியலாக குவித்து காவல்காத்து வருகின்றனர். ஆனால், ஆலஞ்சேரியிலுள்ள அரசு நெல் கொள்முதல் நிலையம் தற்போதுவரை திறக்காமல் மூடி கிடப்பதாலும், தொடர்ந்து மழை பெய்துவருவதாலும் தங்களின் நெல் மூட்டைகள் வீணாகி வருவதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இது குறித்து சமந்தப்பட்ட அலுவலர்களிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனை கண்டித்து அப்பகுதி விவசாயிகள் உடனடியாக நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்கக் கோரியும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காத்திட வழிவகுக்க வேண்டியும் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் மிகப்பெரிய சாலைமறியல் போராட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் எச்சரித்தனர்.
இதையும் படிங்க: திருவாரூரில் விளைநிலங்கள் தரிசாக மாறும் அவலம்: மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?