தமிழ்நாட்டில், நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து, ஆட்சி அமைக்க உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாட்டின் தொன்மைவாய்ந்த ஆதீனங்களான திருவாவடுதுறை, தருமபுரம் ஆதீனகர்த்தர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் தனது வாழ்த்துரையில், "தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் தமிழ் செம்மொழி மாநாடு நடத்தியது, தமிழ் இலக்கியங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தது, கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை அமைத்தது, திருக்கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்வது போன்ற பல்வேறு தமிழ் சார்ந்த திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்தவர் கலைஞர் மு.கருணாநிதி.
அவரது வழியிலே அவரது குமாரர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்பது வரவேற்கத்தக்கது. அவரை திருவாவடுதுறை ஆதீனத்தின் சார்பில் வாழ்த்துகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
இதேபோல் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தனது வாழ்த்துரையில், "மக்கள் தீர்ப்பை ஏற்று பொறுப்பேற்கும் புதிய அரசு சமயம், மதம், இனம் கடந்த பொதுநிலையில் நின்று ஆட்சி செய்யவும், கரோனா நெருக்கடி காலத்தில் பொறுப்பேற்கும் நிலையில் அதன் தன்மைக்கேற்கவும், பல சவால்கள் நெருக்கடியான சூழ்நிலையில் அதனதன் தன்மை அறிந்து எந்நிலையிலும் ஒருசார்பு இல்லாது ஆட்சி செலுத்தவும் வாழ்த்துகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.